அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா: கலெக்டரிடம் மனு
மதுரை: மதுரை அவனியாபுரம் கிராம கமிட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் உட்பட சிலர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: அவனியாபுரத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பூர்வகுடி மக்கள். எங்கள் முன்னோர் காலம்தொட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடக்கிறது. இவ்விழாவை பல்வேறு தரப்பினர் சாதி அடிப்படையில் தாங்கள் தான் நடத்த வேண்டும் என உரிமை கோருகின்றனர். இவ்விழா அனைவருக்கும் பொதுவானது. எங்களுக்குள் ஜாதி மத வேறுபாடும் கிடையாது. எங்கள் பகுதியில் அதிகளவில் இளைஞர்கள் காளைகளை வளர்த்து வருகின்றனர். அதிகளவில் ஜல்லிக்கட்டு வீரர்களும் உள்ளனர். இவ்விழாவை யாருக்கும் பாதகமின்றி, சாதி, மத அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் சார்பில் நடத்த அனுமதி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.