கொஞ்சம் பொறுக்கணும் எம்.எல்.ஏ.,தான் திறக்கணும்
சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். இங்கு நுாலகம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024 - -25ன் கீழ் ரூ.12.39 லட்சம் செலவில் உணவு தானியக் கிடங்குடன் ரேஷன் கடை அமைக்கப்பட்டது. கட்டி 3 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு திறக்காமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் மது அருந்தவும், சமூகவிரோதிகளின் புகலிடமாகவும் மாறி வருகிறது. இதனை திறக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர். அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பல ஊர்களில் அரசு கட்டடங்களை எம்.எல்.ஏ., வை வைத்து திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் திறக்கப்படும்' என்றனர்.