UPDATED : செப் 08, 2025 04:50 PM | ADDED : செப் 08, 2025 09:23 AM
மதுரை: 'மதுரையில் சி.இ.ஓ., அலுவலகம் முதல் அனைத்து கல்வி அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்த வேண்டும்' என ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். கல்வித்துறையில், சி.இ.ஒ., அலுவலகம், உயர், மேல்நிலைக்கு மேலுார், மதுரை என 2 டி.இ.ஓ., அலுவலகங்கள், தொடக்க கல்வியில் மதுரை, திருமங்கலம் டி.இ.இ.ஓ., அலுவலகங்கள், ஒன்றியம் வாரியாக 15 பி.இ.ஓ., அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவ்வலுவலகங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலர்கள் பணிக்கு செல்வதில்லை. குறிப்பாக அனைத்து அலுவலகங்களையும் கன்ட்ரோல் செய்யும் சி.இ.ஓ., அலுவலகத்திலேயே அலுவலர்கள் இஷ்டப்பட்ட நேரத்திற்கு பணிக்கு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. நிர்வாகிகள் போர்க்கொடி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு சென்று 'எமிஸ்' ல் தங்கள் வருகையை பதிவு செய்வது போன்ற கட்டுப்பாடு அலுவலர்களுக்கு இல்லை. இதனால் பணிகள் தேங்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக அனைத்து கல்வி அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவை கட்டாயமாக்க வேண்டும் என ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்கள் கூறியதாவது: ஆசிரியர்கள் பணி நிமித்தமாக அலுவலங்களுக்கு செல்ல நேர்ந்தால் சம்பந்தப்பட்டவர்கள் சீட்டில் இருப்பதில்லை. டீ குடிக்கவோ, கலெக்டர் அலுவலக கூட்டத்திற்கோ அல்லது சொந்த பணிக்காக அனுமதி பெற்று வெளியே சென்றுள்ளதாகவோ கூறுகின்றனர். அவர்களை கண்காணிக்க வேண்டிய ஆய்வு அதிகாரிகள் பள்ளிகளை பார்வையிட சென்றுவிடுகின்றனர். புகார் அளிக்க தயார் அலுவலர்களை கண்காணிக்க வேண்டிய கண்காணிப்பாளர்களே பல அலுவலங்களில் தாமதமாகத்தான் வருகின்றனர். இதனால் பலர் பணிகளில் 'டிமிக்கி' அடிக்கின்றனர். இதற்கு சி.இ.ஓ., அலுவலகமும் விதிவிலக்கல்ல. இதுபோன்ற காரணங்களால் அலுவலகங்களில் பணிகள் தேங்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக அரசு உதவிபெறும் மைனாரிட்டி பள்ளிகளுக்கான பைல்கள் கல்வி அலுவலங்களில் தேங்குவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மதுரையில் நடந்த மாநில சிறுபான்மையினர் கமிஷன் ஆய்வுக் கூட்டத்தில், பள்ளிகள் சார்பில் புகார் அளிக்க தயாராக இருந்தோம். ஆனால் கல்வி அதிகாரிகள் சிலர் எங்கள் நிர்வாகிகளை அழைத்து 'உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம். கமிஷன் முன் புகார் அளித்துவிட வேண்டாம்' என கேட்டுக்கொண்டனர். இதனால் புகார் தெரிவிக்கவில்லை. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த பைல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்களை கடத்துகின்றனர். இதுகுறித்து கலெக்டரை சந்தித்து முறையிடும் மனநிலையில் உள்ளோம் என்றனர்.