உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செங்கோட்டையன் விவகாரத்தில் பழனிசாமிக்கு பா.ஜ., நெருக்கடி திருமாவளவன் சந்தேகம்

செங்கோட்டையன் விவகாரத்தில் பழனிசாமிக்கு பா.ஜ., நெருக்கடி திருமாவளவன் சந்தேகம்

மதுரை: ''ஏதோ பரபரப்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் செங்கோட்டையன் சொல்லி உள்ளார். பழனிசாமிக்கு மறைமுகமாக நெருக்கடியை பா.ஜ.,தான் உருவாக்குகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது'' என மதுரையில் வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார். அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வை ஒன்றிணைப்பதற்கு செங்கோட்டையன் எடுத்து வரும் முயற்சி பாராட்டக்கூடியது. அ.தி.மு.க., ஈ.வெ.ரா., பாசறையில் உருவான இயக்கம் என்பதால் அதன் மீது மதிப்பும் மதிப்பீடும் உண்டு. பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., பிடியில் அ.தி.மு.க., இயக்கம் சிக்கி சீரழிந்து விடக்கூடாது. செங்கோட்டையன் எந்த பின்னணியில் இயங்குகிறார் என்று தெரியாது. ஆனால் பா.ஜ.,வின் கை இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவ்வாறு இருக்குமேயானால் அது அ.தி.மு.க.,வின் எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையாது. பழனிசாமிக்கு மறைமுகமாக நெருக்கடியை பா.ஜ.,தான் உருவாக்குகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கூட்டணி அமைத்து மாநிலக் கட்சிகளை பா.ஜ., மெல்ல மெல்ல நீர்த்துப்போக செய்திருக்கிறது என்பது கடந்த கால வரலாறு. அப்படி ஒரு நிலை அதி.மு.க.,வுக்கு வந்துவிடக்கூடாது. செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை. யார் யாரை சேர்க்க வேண்டும் என வெளிப்படையாக சொல்லவில்லை. மனம் திறந்து பேசுவேன் என கூறிவிட்டு முழுமையாக மனம் திறக்க தயங்கினாரா என்ற கேள்வி எழுகிறது. ஏதோ பரபரப்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் சொல்லி உள்ளார். இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. தி.மு.க., கூட்டணியை மக்கள் கைவிடமட்டார்கள். தி.மு.க., கூட்டணியை வீழ்த்துவதற்கு தமிழகத்தில் ஒரு அணி இன்னும் உருவாகவில்லை. பா.ஜ., கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வம், தினகரன் வெளியேறிய நிலையில், தே.மு.தி.க., பா.ம.க., எந்த கருத்தையும் இதுவரை சொல்லவில்லை. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழுமை பெறவில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை