உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செங்கோட்டையனால் பழனிசாமிக்கு தர்மசங்கடம் ஒன்றிணைந்த அ.தி.மு.க., தான் தங்கள் நிலைப்பாடு என பா.ஜ., தகவல்

செங்கோட்டையனால் பழனிசாமிக்கு தர்மசங்கடம் ஒன்றிணைந்த அ.தி.மு.க., தான் தங்கள் நிலைப்பாடு என பா.ஜ., தகவல்

மதுரை: 'செங்கோட்டையன் நோக்கம் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதே. ஒன்றிணைந்த அ.தி.மு.க., இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு' என பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: விஜய், சீமான் போன்றவர்களுக்கு சரக்கு வரி என்றால் என்னவென்றே தெரியவில்லை. 'சரக்கு வரி என்றால் மதுவிற்கு ஏன் வரி விதிக்கவில்லை' என சீமான் முன்பு கூறினார். அவருக்கு தெரிந்த சரக்கு அதுதான். நாட்டின் 17 வகையான மறைமுக வரிகளை ஒரே வரியாக 4 அடுக்குகளில் கொண்டு வருவது தான் ஜி.எஸ்.டி.,யின் நோக்கம். இன்று இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்கள் உயர்ந்ததற்கு ஜி.எஸ்.டி., யின் பங்கு இன்றியமையாதது. இது புதிய வரி அல்ல. வரிவிதிப்பு முறை மட்டுமே. ஜி.எஸ்.டி., கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பிரதமர் மோடி அறிவித்தபடி, இரண்டு அடுக்குகளாக ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. காங்., மூத்த தலைவர் சிதம்பரம் போன்ற ஹார்வர்டு பல்கலையில் அறிவுலக மேதைகள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் ஜி.எஸ்.டி.,யை அறிமுகப்படுத்தவில்லை. பீஹார் தேர்தல் முடிந்த பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பும். குரு பார்க்க கோடி புண்ணியம் தானே. கூட்டணியின் சிறு பிரிவுகள், குழப்பங்கள் சரிசெய்யப்படும். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க., ஒன்றிணைப்பு பற்றி பேசிய விஷயத்தை நான் மதிக்கிறேன். ஆனால் சொன்ன விதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன. அ.தி.மு.க., மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கலாம். செங்கோட்டையின் நோக்கம் பழனிசாமியை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குவது தான். ஒன்றிணைந்த அ.தி.மு.க., இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. தேனியில் பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தின்போது வண்டியை மறைத்து ஒன்றிணைந்த அ.தி.மு.க., வேண்டும் என பேனர், கோஷம் எழுப்பிய முறை தவறானது. தேனியில் மட்டும் குரல் வருவது ஏன். சந்தேகம் வருகிறது. சொல்கிற விதத்தை மாற்றிக் கொண்டால் கருத்து 100 சதவீதம் சரியானதே என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ