தொழில் நிறுவனங்கள் பதிவுக்கு முகாம்
திருமங்கலம்: இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை பெருந்தொழில் நிறுவனங்கள் ஆண்டுக்கு 40 சதவீதம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதற்கு சிறு, குறு, பெரு நிறுவனங்கள் ஜெம் இணைய வழி போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும். இதன் மூலம் கடந்தாண்டு பெருந் தொழில் நிறுவனங்கள் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 40 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களை கொள்முதல் செய்துள்ளனர். இந்த போர்ட்டலில் பதிவு குறித்து தமிழக உற்பத்தி நிறுவனங்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் தமிழக நிறுவனங்களிடம் இருந்து ரூ. 4500 கோடி அளவுக்கே கொள்முதல் நடந்துள்ளது. இதற்கு சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள பேம் டி என் நிறுவனம் மற்றும் கப்பலுார் தொழிலதிபர்கள் சங்கம் இணைந்து 'ஜெம் போர்ட்டலில்' பதிவு செய்வதற்கான வழிமுறைகள், பதிவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்த சிறப்பு முகாமை பிப்.14ல் கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க அரங்கில் நடத்த உள்ளனர். இதில் தொழில் துறை ஆணையர் நிர்மல்ராஜ் பங்கேற்க உள்ளார். மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சங்கத் தலைவர் ரகுநாத ராஜா தெரிவித்துள்ளார்.