ரோடு, தெருக்களில் தானா ஓடுது குடிநீர் வீணாவதை குறைக்க முடியுமா
மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கே குடிநீர் வழங்கும் வகையில் குழாய் இணைக்கும் பணி முடிந்து, குடிநீர் வினியோகம் முறை குறித்த சோதனை நடக்கிறது. இச்சோதனையால் பல இடங்களில் குடிநீர் வீணாகி ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுவது தொடர்கிறது. இத்திட்டத்தில் வீடுகளுக்கு குழாய்கள் இணைப்பு, மீட்டர் பொருத்துதல், பயன்படுத்தப்படும் குடிநீர் குறித்து கணக்கெடுப்பு (ரீடிங்) போன்ற பணிகளை மாநகராட்சி பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர். இதற்கிடையே புதிதாக இணைப்பு கொடுக்கப்பட்ட பகுதிகளில், மேல்நிலை தொட்டிகளில் இருந்து, தண்ணீர் திறக்கப்பட்டு குழாய் வழியே தண்ணீர் செல்லும் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்படுகிறது. அதில் சரியாக இணைக்கப்படாத குழாய்கள், கடைசி பகுதியில் (எண்ட் பிளேஸ்) உள்ள குழாய்களில் சரியான அடைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் அப்பகுதிகளில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வெளியேறி ரோடுகளில் தேங்கி வீணாகிறது. பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக இப்பிரச்னை தொடர்கிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மாநகராட்சி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, இத்திட்டத்தின்படி குழாய் இணைப்புகளில் பிரச்னையை கண்டறியும் வகையில் தான் சோதனை நடத்தப்படுகிறது. கசிவு, உடைப்பால் வெளியேறுவது உள்ளிட்ட பிரச்னைகளை ஆரம்பத்தில் சரிசெய்தால் தான் எதிர்காலத்தில் கசிவு பிரச்னை எழாது. இருப்பினும் சோதனையின் போது அதிகளவு குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.