விபத்து சிகிச்சை பிரிவு திருமங்கலத்தில் துவக்க வழக்கு
மதுரை, அக்.31- மதுரை வெரோணிக்கா மேரி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மேலுார் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு உள்ளது. திருமங்கலம் வழியாகச் செல்லும் நான்குவழிச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. விபத்து வழக்குகளை கையாள திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும். அதற்குரிய 'சிடி' ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்பை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சகா ஆஜரானார். நீதிபதிகள் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர், இணை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.14 க்கு ஒத்திவைத்தனர்.