தேசியத் தலைவர் படத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தேசியத் தலைவர் படத்தை இயக்குநர் அரவிந்தராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் முன்னோட்ட காட்சி, பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரை கதா நாயகனாக சித்தரிக்கிறது. அதில் அவர், 'ராமநாதபுரம் மாவட்டத்தில் என்னை எதிர்க்க யார் இருக்கிறார்கள்' என பேசுவது போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரு பிரிவினரிடையேயான சர்ச்சை தான் கதை என்பது தெளிவாகிறது. இது பொது அமைதிக்கு எதிரானதாக இருக்கும். படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சான்று வழங்க தடை விதிக்க வேண்டும். தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு குறிப்பிட்டார். இதேபோல் மதுரை வழக்கறிஞர் செல்வகுமாரும் படத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறப்பட்டு ஏற்கனவே வெளிவந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரர்கள் வாபஸ் பெற்றதால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.