உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா 2029 தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா 2029 தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்

புதுடில்லி: 2029ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு 2023ல் அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு செப்டம்பரில் பார்லி.,யின் இரு சபைகளிலும் மசோதா நிறைவேறியது.வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதா புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதாவாகும். மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அது 2029ல் தான் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுவரையறுக்கப்பட்ட பின்னரே இது சாத்தியப்படும் என்பதால் அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து 2027ல் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.அதன்பின் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு, புதிய தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் செய்யப்படும். இதன்படி 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் மசோதா அமலுக்கு வரும்.அவ்வாறு தொகுதி அடிப்படையில் எல்லையை மறு சீரமைப்பதில் சட்ட சிக்கல் நிலவுகிறது. இது தொடர்பாக சட்டதிருத்த மசோதா இயற்றப்பட்டு, இரு சபைகளிலும் இதற்கான ஒப்புதலை பெறவேண்டும். இதற்காக சட்ட நிபுணர்ளுடன், மத்திய அரசின் பிரதிநிதிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.இதற்கிடையே, மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் புதிய எல்லை நிர்ணயம் பார்லி.,யில் தங்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் கவலை தெரிவித்து வருகின்றன. ஆகையால், புதிய எல்லை நிர்ணயத்தை எதிர்க்கும்மாநிலங்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.அதேசமயம், எல்லை நிர்ணய கமிஷன் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்தக் குழு, அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பிரதிநிதிகளை சந்தித்து, பரிந்துரைக்கப்படும் மாற்றங்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.2029ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை நோக்கமாக வைத்தே அது தொடர்பான பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ