மதுரை : மதுரைக்கு நாளை காலை (மே 31) வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.மாலை 4:00 மணியளவில் முதல்வரின் ரோடு ஷோ அவனியாபுரத்தில் துவங்குகிறது.இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.ஏல்.ஏ., மணிமாறன் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1ல் தி.மு.க., மாநில பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க நாளை காலை மதுரை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தி.மு.க.,வினர் சார்பில் கட்சி கொடி ஏந்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. ரோடு ஷோ நடக்கும் பகுதிகள்
நாளை மாலை முதல்வரின் ரோடு ஷோ நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்படவுள்ளது. ரோடு ஷோ அவனியாபுரத்தில் மாலை 4:00 மணியளவில் துவங்குகிறது. வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், பழங்காநத்தம், பைபாஸ் ரோடு, குரு தியேட்டர் டி.டி. ரோடு, ஏ.ஏ.ரோடு, அரசரடி சிக்னல், ஜெயில் ரோடு, கரிமேடு வரை நடக்கிறது.பின் மதுரா கோட்ஸ் அருகே முன்னாள் மேயர் முத்து வெண்கல சிலையை முதல்வர் திறக்கிறார்.முதல்வரை வரவேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.