பள்ளி வளாகத்திற்குள் ‘குடிமகன்’கள் கொட்டம்
திருமங்கலம்: திருமங்கலம் மம்சாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தினமும் மதுபாட்டில்களை உடைத்து கொட்டமடிக்கும் குடிமகன்களால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். திருமங்கலம் மம்சாபுரத்தில் இருந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சில ஆண்டுகளுக்கு முன்பு இருபாலர் பள்ளியாக மாற்றப்பட்டது. இப்பள்ளிக்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர் இதுவரை அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாப்பு சுவர் இல்லாததால், பள்ளி வளாகத்தில் இரவு நேரம் குடிமகன்கள் கொட்டம் அதிகரித்து வருகிறது. மைதானத்தில் அமர்ந்து மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு மது அருந்திய சிலர், வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை முன்பு காலி மது பாட்டில்களை வீசி உடைத்துள்ளனர். பாட்டில்கள் உடைந்து கிடந்ததால் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் நடமாட முடியாத நிலைக்கு ஆளாகினர். இப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், இரவு நேர காவலாளி நியமிக்கவும் வேண்டும். போலீஸ் ரோந்தை அதிகரித்து, வளாகத்தில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.