உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 108 ரோடு.. மாநகராட்சியில் ஏ கிரேடாக தரம் உயர்வு: கட்டடம், வீடு சொத்து வரி அதிகரிக்கிறது

108 ரோடு.. மாநகராட்சியில் ஏ கிரேடாக தரம் உயர்வு: கட்டடம், வீடு சொத்து வரி அதிகரிக்கிறது

மதுரை: மதுரை மாநகராட்சியில் வாகன போக்குவரத்து, வணிகப் பயன் அதிகமுள்ள 108 'சி', 'பி' கிரேடு ரோடுகள், 'ஏ' கிரேடாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பகுதி வீடுகள், கட்டடங்களுக்கு சொத்துவரி அதிகரிக்கப்பட உள்ளது. மாநகராட்சியில் 100 வார்டுகளில் வீடுகள், கடைகள், வணிக வளாகங்களை, 'ஏ', 'பி' 'சி' கிரேடு அடிப்படையில் வகைமாற்றம் செய்து, சொத்துவரி நிர்ணயம் செய்யப்படுகிறது. குடிநீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள வணிக நிறுவனங்கள், வீடுகள் கொண்ட போக்குவரத்து அதிகமுள்ள ரோடு பகுதிகள் 'ஏ' கிரேடு எனவும், மக்கள் நெருக்கம், பஸ் போக்குவரத்து, குடியிருப்புகள் மட்டும் உள்ள அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டிய ரோடு பகுதிகள் 'பி' கிரேடு எனவும், பஸ் போக்குவரத்து இல்லாத, மாநகராட்சியால் அடிப்படை வசதிகள் இல்லாத ரோடு பகுதிகள் 'சி' கிரேடு எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக 'பி', 'சி' கிரேடு வகை ரோடுகள் 'ஏ' கிரேடாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் வரி நிர்ணயத்தில் ஏற்றத்தாழ்வு நீடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநகராட்சிக்கு ரூ.பல கோடி வரி இழப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், ஆக., 29ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், 108 'பி', 'சி' ரோடுகள் 'ஏ' கிரேடாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவறுதலாக வகை மாற்றம் செய்யப்பட்டால் அதை மாற்றம் செய்ய வரி வருவாய் பிரிவு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மண்டலம் 1, மண்டலம் 3ல் ஏராளமான வணிகப் பயன்பாடு மிகுந்த ரோடுகள் 'பி' மற்றும் 'சி' கிரேடாக உள்ளன. இவை 'ஏ' கிரேடாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, மண்டலம் 1ல் 53 'சி' கிரேடு ரோடுகள் 'ஏ' கிரேடாகவும், 55 'பி' கிரேடு ரோடுகள் 'ஏ' கிரேடாகவும் மாற்றப்பட்டுள்ளன. எந்த தீர்மானமும் விவாதத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஆனால் மாநகராட்சி கூட்டத்தை அ.தி.மு.க., புறக்கணித்த நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற மா.கம்யூ.,ம் அரசியலுக்காக மவுனமாகியது. ஏற்கனவே 100, 150 சதவீதம் சொத்து வரி உயர்வால் மக்கள் திண்டாடுகின்றனர். எனவே வரி நிர்ணயம், மாற்றம் பணிகள் மக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை