உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இணைப்பொருட்கள் வாங்கினால் மட்டுமே யூரியா உரம் விற்பனை தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்

இணைப்பொருட்கள் வாங்கினால் மட்டுமே யூரியா உரம் விற்பனை தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்

மதுரை: மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா, பொட்டாஷ் உரங்களை கடைகளில் பெறுவதற்கு, யூரியாவைப் போல 3 மடங்கு கூடுதல் விலையிலான தனியார் நிறுவன பயிர் ஊக்கிகளை வாங்க கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது: ஒரு மூடை யூரியாவின் உற்பத்தி விலை ரூ.2000 ஐ தாண்டும் என்றாலும் அவற்றை உரத்தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு பெற்று விவசாயிகளுக்கு ரூ.266 க்கு விற்கிறது. இதேபோல பொட்டாஷ், டி.ஏ.பி., போன்ற உரங்களும் அரசு மானியத்தில் எங்களுக்கு கிடைக்கிறது. இந்த உரங்கள் கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகள் மூலம் விற்கப்படுகிறது. ஏற்கனவே கூடுதல் விலையில் உரம் விற்கக்கூடாது என்பதற்காக கடைகளின் வாசலில் உரங்களின் விலை குறித்த அறிவிப்பு பலகை இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதை பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில் உரத்தயாரிப்பு நிறுவனங்கள் பயிர் ஊக்கிகள் போன்ற பொருட்களையும் தயாரித்து உரக்கடைகளில் கொடுத்து விற்பனை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றன. விவசாயிகள் பயிர் ஊக்கிகளை சேர்த்து வாங்கினால் தான் யூரியா உர மூடையே தருகின்றனர். இல்லாவிட்டால் யூரியா இல்லை என்று பொய்யான தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனர். உற்பத்திச் செலவு அதிகரிப்பால் விவசாயிகள் பரிதவிக்கும் நிலையில் ரூ.266க்கு யூரியா வாங்குவதற்கு கூடுதலாக ரூ.700 கொடுத்து பயிர் ஊக்கிகளை வாங்கச் சொல்வது நியாயமில்லை. மத்திய, மாநில ஆட்சியாளர்களில் சிலர் உர உற்பத்தியாளர்களாக, பங்குதாரர்களாக இருப்பதால் உரத்தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு சென்று இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ