விசுவாச அதிகாரிகளுக்கு மாநகராட்சி செக் ஒரே நாளில் 51 பேர் மாற்றம்
மதுரை: மதுரை மாநகராட்சியில்செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் (ஏ.இ.,) உட்பட 51 பேருக்கு மாறுதல், கூடுதல் பணிகள் ஒதுக்கீடு செய்து கமிஷனர் சித்ரா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மேயரின் கணவர் பொன்வசந்த்திற்கு விசுவாசமாக செயல்பட்டவர்களுக்கு 'செக்' வைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியில் பொறியியல் பிரிவு முக்கியமானது. குடிநீர் விநியோகம், பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள்,ரோடுகள், மழைநீர் வடிகால் பராமரிப்பு, தெரு விளக்கு, வாகனங்கள், கழிவுநீர் நிரேற்றுநிலையங்கள் பராமரிப்பு பணிகளில் இப்பிரிவின் செயற்பொறியாளர்கள் முதல் தொழில்நுட்ப உதவியாளர்கள் வரை முக்கிய பங்கு வகிப்பர்.இப்பிரிவில் ஏ.இ.,க்கள் பற்றாக்குறையை சமாளிக்க தேர்ச்சி திறன் 2 நிலை அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது தொடர்கதையாக இருந்தது. ரெகுலர் ஏ.இ.,க்களை விட கூடுதல் பொறுப்புகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வார்டுகள் அந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆதரவு இருந்தது. அவர்களின் 'ஆசி'யுடன் தங்களுக்கு பிடித்த வார்டுகள், பிடித்த பணிகளை அலுவலர்கள் கேட்டு பெற்று காலம் கடத்தினர். அதற்கு 'கைமாறாக' அந்த பிரமுகர்களுக்கு விசுவாசத்தை காட்டி வந்தனர். இதனால் பொறியியல் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து தான் ஒரே நாளில் 'நிர்வாக காரணம்' எனக் கூறி 3 செயற்பொறியாளர், 11 ஏ.இ.,க்கள், 3 உதவி செயற்பொறியாளர் உட்பட 51 பேரை கமிஷனர் மாற்றியுள்ளார். இதில் நேர்மையான சிலருக்கு உரிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொறியியல், நகரமைப்பு, வருவாய் உட்பட பிரிவுகளில் மாநகராட்சி அலுவலர்கள் பெரும்பாலும் மேயரின் கணவர்பொன்வசந்த் கட்டுப்பாட்டில் தான் இருந்தனர்.இதை பயன்படுத்தி சிலர் தங்கள் சொந்த 'பாக்கெட்'டை நிரப்பினர். தற்போது கட்சியில் இருந்து பொன்வசந்த் நீக்கப்பட்டதால் அந்த அலுவலர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'இனியாவது அவரை தொடர்பு கொள்வதை மாநகராட்சி அலுவலர்கள்நிறுத்திக் கொள்ள வேண்டும்' என கமிஷனரும் மறைமுகமாக எச்சரித்தார். ஆனாலும் சிலர் அதை பின்பற்றவில்லை. இதையடுத்து தான் 51 பேர் இடமாற்றப்பட்டனர். இதன் மூலம் 'விசுவாச' அதிகாரிகளுக்கு 'செக்' வைக்கப்பட்டுஉள்ளது என்றார்.