உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஓடுறாங்க...

மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஓடுறாங்க...

மதுரை: மதுரை மாநகராட்சியில் மண்டல கூட்டங்கள் நடக்காததால் வார்டுகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் சரிவர இல்லாததால் கவுன்சிலர்களை கேள்விகளால் மக்கள் துளைத்தெடுக்கின்றனர். சென்னையை அடுத்து அதிக மக்கள் தொகை, வார்டுகளை கொண்ட மாநகராட்சி மதுரை. இங்கு மேயர் பதவி 15 நாட்களுக்கும் மேலாக காலியாக உள்ளது. மண்டலத் தலைவர்களும் இல்லை. ஒவ்வொரு வார்டுக்கும் தேவையான பணிகள் குறித்து மண்டல கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஒவ்வொரு மாதமும் மேயர் தலைமையில் நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி பெற்றால் தான் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் ஆறு மாதங்களாக மண்டல கூட்டங்கள் நடக்கவில்லை. வார்டுகளில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்ததை மாற்றுவது, குடிநீர் கசிவை சரி செய்வது, ரோடுகளில் 'பேட்ஜ் ஒர்க்' மேற்கொள்வது, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் முடங்கி கிடக்கின்றன. மண்டல தலைவர்கள் இல்லாத நிலையில் அந்தந்த உதவி கமிஷனர்கள் தலைமையில் ஒரு மாதத்திற்கு முன் மண்டல கூட்டம் நடந்தது. ஆனாலும் இதுவரை 'ஒர்க் ஆர்டர்', நிதி ஒதுக்கீடு இல்லை. இதனால் கவுன்சிலர்களை மக்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனர். விட்டால் போதும் என கவுன்சிலர்கள் தெறித்து ஓடுகின்றனர். மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா கூறியதாவது: மேயர், மண்டல தலைவர்கள் இல்லாததால் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே கடும் அதிருப்தியில் உள்ளனர். துணைமேயரை வைத்து கூட்டம் நடத்த ஆளுங்கட்சிக்கு விருப்பம் இல்லை என்றாலும் நுாறு வார்டுகளின் 20 லட்சம் மக்கள் நலனை மனதில் கொண்டு அக்டோபருக்கான கவுன்சில் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதிலும் தி.மு.க., அரசியல் செய்கிறது. கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது. முதற்கட்டமாக ரூ.10 லட்சத்திற்கான 'ஒர்க் ஆர்டர்' பெற்று வேலைகள் நடந்தன. ஆனால் மண்டல கூட்டங்கள் நடக்காததால் மீதமுள்ள ரூ.15 லட்சத்தை பெற்று வார்டுகளில் வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக உதவி கமிஷனர்கள் தலைமையில் நடந்த மண்டலக் கூட்டங்களில் வார்டுகளுக்கு தேவையான திட்டம் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றியதுடன் உள்ளது. அதை அனுமதித்து அதற்கான நிதியை ஒதுக்க வேண்டுமென்றால் கவுன்சில் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். எனவே அதிகாரிகள் தலைமையில் மண்டல கூட்டங்கள் நடத்தியது கண்துடைப்பாக உள்ளது. ஆளுங்கட்சி செய்யும் அரசியல் நாடகத்தால் மக்கள் நலனை காக்க வேண்டிய மாநகராட்சி முடங்கியுள்ளது. இதை கண்டித்து அ.தி.மு.க., தொடர் போராட்டங்களை நடத்தும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
நவ 01, 2025 09:45

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் தற்போது பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் sewer canal பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் ஒப்பந்ததாரர் தரமற்ற சிமெண்ட் கலவையை substandard cement mix ratio பயன்படுத்துகிறார் என்பதைக் காண முடிகிறது. இதனால் எதிர்காலத்தில் வாய்க்கால்கள் உடைபடுதல், நீர் தேக்கம், மண் சரிவு போன்ற அபாயங்கள் ஏற்படலாம். இத்தரக்குறைவான பணிகளுக்குக் காரணம், ஒப்பந்ததாரர் திமுக கவுன்சிலர்களுக்கும் சில பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கமிஷன் அழுக்கு பணம் வழங்குவதால் பணிகளின் தரம் கண்காணிக்கப்படாமல் போவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தப் பணிகளுக்குரிய மேற்பார்வை, சோதனை, மற்றும் தரச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் நகராட்சி பொறுப்பாளர்களால் முறையாக செய்யப்படவில்லை. மேலும் குறிப்பிடத்தக்கது, மழைக்காலத்தில் rainy season பணிகள் நடைபெறும் போது ஒப்பந்ததாரர் வாய்க்கால்களின் சுற்றுப்பகுதியில் மணல் நிரப்புதல் sand filling செய்யாமல் விட்டுள்ளார். இதன் காரணமாக பல இடங்களில் மண் தள்ளாடுதல், குழிகள் உருவாகுதல், மற்றும் நடைபாதைகள் sidewalks சரிவது போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. வாய்க்கால் கட்டுமானப் பணிகள் முடிந்த பின், அதனைச் சுற்றியுள்ள நடைபாதைகள் சரியாக அமைக்கப்படவில்லை. இதுபோன்ற குறைபாடுகளால் மக்கள் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் திருமங்கலம் நகராட்சியின்மேல் இருக்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். அத்துடன், இந்தக் கழிவுநீர் வாய்க்கால்கள் திறந்தவாறு விடப்படக் கூடாது. அவை தகுந்த தகடுகள் slabs மூலம் மூடப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் கொசுக்கள் பெருகும் அபாயம், துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் அதிகரிக்கும். மேற்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவும். குறிப்பாக, மரண் குழிகளை maran kulikalai உடனடியாக உண்டுபண்ணும் undupannum பொறுப்பை திருமங்கலம் நகராட்சி ஏற்று, உரிய தகடுகளால் மூடி, பணிகளின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். நடவடிக்கை வேண்டியது: 1. ஒப்பந்ததாரரின் பணிகளைத் தரச் சோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும். 2. பணிகள் நடைபெறும் இடங்களில் மணல் நிரப்புதல் மற்றும் நடைபாதைகள் சரியாக அமைக்கப்பட வேண்டும். 3. திறந்த வாய்க்கால்களை தகடுகள் மூலம் மூட வேண்டும். 4. நகராட்சி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.


முக்கிய வீடியோ