புதுரோடு பணிகள் எப்போது துவங்கி எப்போது முடியும் கவுன்சிலர்கள் கேள்வி
திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் நடந்தது. உதவி கமிஷனர் ராதா தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் போஸ்முத்தையா, கருப்பசாமி, இந்திராகாந்தி, சுவேதா, முருகன், முத்துலட்சுமி பேசியதாவது: 84வது வார்டு பகுதிகளில் அனைத்து ரோடுகளும் மிகவும் மோசமாக உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின்பு ரோடுகள் சீரமைக்கப்படும் என்கின்றனர். எப்போது பணிகள் துவங்கும் எப்போது நிறைவடையும். அதுவரை வாகனம் ஓட்டுபவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை தேவை. 10 நாட்களுக்கும் மேலாக குப்பை தொட்டிகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரை மாற்றி வேறு ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும். அம்ரூத் குடிநீர் திட்ட குழாய்களில் கசிவால் தண்ணீர் வீணாகிறது. 100வது வார்டில் ஏராளமான தெருவிளக்குகள் எரியவில்லை. அம்ருத் குடிநீர் திட்ட பணிகளுக்காக தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். கவுன்சிலர்களுக்கான நிதியை உயர்த்த வேண்டும் என்றனர்