கல்லுப்பட்டியில் வெள்ளரி விவசாயம் அமோகம்
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி பகுதியில் வெள்ளரி விவசாயம் அமோகமாக நடைபெற்று வருகிறது. சீசன் நேரத்தில் நல்ல விளைச்சல், விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்பானங்களை தேடி அருந்துகின்றனர். அப்படி இருந்தும் உடல் உஷ்ணத்தால் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் கோடையில் உடல் சூட்டை தணிக்க அதற்கு ஏற்ற தர்பூசணி, வெள்ளரி, இளநீர் விளைவிக்கப்பட்டு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.அந்த வகையில் வெயில் நேரத்தில் சூடு தணிக்க வெள்ளரி முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் வெள்ளரி அதிகளவில் பயிரிட்டுள்ளனர். அதில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது சீசன் என்பதால் நல்ல கிராக்கியும் இருந்து வருகிறது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: வெள்ளரி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் ஆகலாம். பயிரிட்ட 30 நாட்களில் பூத்து பிஞ்சு விட ஆரம்பிக்கும். சீசன் நேரத்தில் தினமும் 30 கிலோ வரை பிஞ்சு கிடைக்கும். கிலோ ரூ. 50க்கு விற்கப்படுகிறது. 40 நாட்கள் பலன் கொடுக்கும் என்றனர்.