நிலையூர் கால்வாயில் சேதமடைந்த ஷட்டர்கள்: விவசாயிகள் கவலை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் நிலையூர் கால்வாயில் ஷட்டர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய் வழியாக, திருப்பரங்குன்றத்தில் பாணாங்குளம், செவ்வந்திகுளம், ஆரியங்குளம், குறுக்கட்டான், பெருங்குடி கண்மாய்களுக்கு செல்லும். இதில் திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் பகுதியில் இக்கண்மாய்களுக்கு முறைவைத்து தண்ணீரை பிரித்து அனுப்ப 4 ஷட்டர்கள் உள்ளன.விவசாயிகள் பூபதி, கழுவன், அய்யாவு, கார்த்திக், மணிகண்டன், குமரன், சுப்பிரமணி கூறியதாவது: பாணாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படும் ஷட்டர் சீராக உள்ளது. மற்ற மூன்று ஷட்டர்களும் பழுதாகி விட்டன. பாணாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கும் போது மற்ற கண்மாய்களுக்கு செல்லும் ஷட்டர்களை அடைக்க முடியாது. இதனால் பாணாங்குளம் கண்மாய் நிரம்புவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிப்படைகிறது. ஷட்டர்களை சீரமைக்க நடவடிக்கை தேவை என்றனர்.