பேரையூர் ரோட்டில் ஆபத்தான பள்ளம்
பேரையூர் : பேரையூர் பைபாஸ் ரோட்டில் அடுத்தடுத்து காணப்படும் பள்ளங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தேனி- -- ராஜபாளையம் செல்லும் ஒரு கி.மீ., பேரையூர் பைபாஸ் ரோட்டில் அடுத்தடுத்து 8 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ரோட்டில் அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட பல அலுவலகங்கள் உள்ளன. மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் தினமும் இந்த ரோட்டை கடந்து செல்ல வேண்டும். கார், பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டில் சென்று வருகின்றன. இத்தகைய முக்கியமான ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.