மேலும் செய்திகள்
துணை ஜனாதிபதியுடன் முதல்வர் சந்திப்பு
30-Oct-2025
மதுரை: பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின் ஆகிய இருவரும் நேற்று இரவு மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் தங்கினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்.,30) நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானம் மூலம் துணை ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் நேற்று மாலை 6:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் தியாகராஜன், எம்.பி., மாணிக்கம் தாகூர், கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவருக்கு பா.ஜ., நிர்வாகிகள் திரளாக வந்திருந்து வரவேற்பு அளித்தனர். பின் அங்கிருந்து காரில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மாலை 6:20 மணிக்கு சென்றார். அவருடன் பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றார். அவருக்கு கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு மணிநேரம் சுவாமி தரிசனம் செய்த அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டார். தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதினம் மடம் அருகே கார் சென்றபோது காரை நிறுத்தச் சொல்லிய துணை ஜனாதிபதி கீழே இறங்கி ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த பா.ஜ., மாநில ஆன்மிக பிரிவு செயலாளர் சிவ பிரபாகர், மாநில செயலாளர் ஹரி, முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார். பின் ஜடாமுனி கோயில் வழியாக தெற்குமாசி வீதிவரை நடந்து சென்று மக்களிடம் கை கொடுத்தார். பின் காரில் ஏறி அரசு விருந்தினர் மாளிகைக்கு இரவு 8:10 மணிக்கு சென்றார். அவரை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் வரவேற்றனர். இன்று காலை விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் செல்ல உள்ளார். முதல்வர் ஸ்டாலின் வருகை அதேநேரம் துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ராஜபாளையம் வழியாக இரவு 10:30 மணிக்கு மேல் மதுரை அரசினர் விருந்தினர் மாளிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்து தங்கினார். வரும் வழியில் பல்வேறு இடங்களில் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., கட்சியினர் வரவேற்றனர். துணை ஜனாதிபதி, முதல்வர் ஒரே வளாகத்தில் இரவு தங்கினர். இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை 7:45 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலை, 8:00 மணிக்கு தெப்பக்குளம் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் பசும்பொன் செல்கிறார்.
30-Oct-2025