திருப்பரங்குன்றத்தில் பூமி பூஜையுடன் நிற்கும் பணிகள் விரைவில் துவக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கிரிவல ரோட்டில் பேவர் பிளாக் நடைமேடை, திருநகரில் பாதாள சாக்கடை, அண்ணா பூங்காவை அறிவியல் பூங்காவாக மாற்றுவதற்கும் பூமி பூஜை நடத்தி பல மாதங்களாகியும் பணிகள் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. கிரிவல பாதை நடைமேடை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வாசல் முதல் மலையைச் சுற்றி 3.25 கி.மீ., கிரிவல ரோடு உள்ளது. பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். தினமும் காலை, மாலையில் அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வர். இந்த ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.பவுர்ணமி நாட்களில் அதிகளவில் பக்தர்கள் செல்லும்போது வாகனங்களும் செல்வதால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கிரிவல ரோட்டில் பக்தர்களுக்கு தனிப் பாதை அமைக்க தமிழக அரசின் மூலதன மானிய நிதி ரூ.2 கோடியில் 3 கி.மீ., யில் கிரிவலம் ரோட்டின் இருபுறமும் தலா 1.5 மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரத்தில் பேவர் பிளாக் நடைமேடை அமைக்க கடந்தாண்டு நவம்பரில் பூமி பூஜை நடந்தது. பாதாள சாக்கடை
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டுகள் 41, 84, 86, 89, 90, 92, 93, 99 முதல் 100 வரையான வார்டுகளில் ரூ. 292.80 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்குவதற்கும் பூமி பூஜை மார்ச் மாதம் நடந்தது. திருப்பரங்குன்றத்தில் பணிகள் துவக்கப்பட்டாலும், திருநகரில் இன்னும் துவக்கப்படவில்லை. அறிவியல் பூங்கா
திருநகர் அண்ணா பூங்கா ரூ. 2.57 கோடியில் அறிவியல் பூங்காவாக மாற்ற மார்ச் மாதம் பூமி பூஜை போடப்பட்டது. பூமி பூஜைகளில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டலத் தலைவர் சுவிதா, பொறியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை எந்த பணிகளும் துவங்குவதற்கான அறிகுறிகளே இல்லை. விரைவில் பணிகள் துவங்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.