வளர்ச்சி என்ற பெயரில் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு விட்டன மத்திய தொல்லியல் துறை இயக்குநர் வருத்தம்
திருப்பரங்குன்றம்: ''வளர்ச்சி என்ற பெயரில் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மதுரை நகருக்குள் அகழ்வாராய்ச்சி செய்து நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை'' என மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசினார். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ்நாடு வரலாற்று பேரவையின் 31வது மாநாடு நடந்தது. சென்னை பல்கலை ஓய்வுபெற்ற பேராசிரியர் சண்முகம் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் விஜயராகவன், பேரவை பொதுச் செயலாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி வரலாற்றுத் துறை தலைவர் உமா வரவேற்றார். அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியதாவது:பழமையான மரபணுக்கள் இந்தியாவிலேயே மதுரையில் தான் அதிகம் கண்டறியப்பட்டது. பிராமி எழுத்து வடிவத்தால் மட்டுமே அசோகரின் வரலாறு கண்டறியப்பட்டது. மாங்குளத்தில் கல்வெட்டுகளை ராபர்ட் சீவல் என்பவர் பார்வையிட்டார். ஆனால் முழுமையாக வாசிக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக வாசித்துக் கொண்டே இருந்தனர். சுப்பிரமணியஅய்யங்கார் தமிழ் எழுத்துக்களாக வாசித்துப்பாருங்கள் என்றார். அவர் மூலம்தான் அவை தமிழ் எழுத்துக்கள் எனத் தெரிந்தது.சிலைகள் தோன்றுவதற்கு முன்னால் இருந்த நாகரீகம் கீழடி நாகரீகம்.தமிழகத்தில் சிலை முறை தோன்றியது கி.பி. 3ம் நுாற்றாண்டு தான். சங்க காலத்தில் பெண் தெய்வ வழிபாட்டு முறை, இயற்கை வழிபாட்டு முறைதான் இருந்தது. அதற்கான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளன. கீழடியில் கி.மு. 800 முதல் கி.பி. 1000 வரை மக்கள் வாழ்ந்துள்ளனர். அதன் பின்பு தான் வெளியேறினர். திருமலை நாயக்கர் மகால் பெரியார் பஸ் ஸ்டாண்ட் வரை இருந்துள்ளதாக தெரிகிறது. வெளி வீதிகள் அகழிகளாக இருந்துள்ளன. சுற்றியுள்ள கோட்டையை உடைத்து தான் பிளாக்பெர்ன் என்பவர் மதுரையை உருவாக்கி இருக்கிறார். மதுரை நகருக்குள் அகழ்வாராய்ச்சி செய்து நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. முழுவதும் கட்டடங்களாக ஆகிவிட்டன. வளர்ச்சி என்ற பெயரில் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மணலுார் அருகில் தான் மதுரை இருந்ததாக திருவிளையாடல் புராணத்தில் மேற்கோள் காட்டுகின்றனர். அப்பகுதி அழிந்த பின்னர் மதுரை கடம்பவனத்தை அழித்து நகராகஉருவாக்கப்பட்டது எனக்கூறுகின்றனர். மதுரையைச் சுற்றி சமணர்கள் குகை அதிகம் உள்ளது. அதை பாதுகாக்க வேண்டும் என்றார்.