அரசு பணிகளில் ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கு வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
மதுரை: மதுரையில் வெண்கோல் (ஊன்றுகோல்) தினத்தையொட்டி பார்வை மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில உதவித்தலைவர் பாரதி அண்ணா, மாவட்ட தலைவர் மதிபாரதி, துணைச்செயலாளர் குமரவேல் ஆகியோர் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு கொடுத்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது: நுாறு சதவீதம் பார்வை திறனற்றோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மொத்த அரசு பணியிடங்களில் ஒரு சதவீதம் பார்வையற்றோர் இருக்கும் வகையில் வங்கி, கல்வி பணிகளில் கூடுதலாக இடம் ஒதுக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மாநில அரசு அறிவித்தபடி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நிரப்பப்படாத பின்னடைவு பணிகளுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு தேர்வு நடத்த வேண்டும். பார்வையற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதோடு லேப்டாப், ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும். பஸ்களில் பஸ்ஸ்டாப் குறித்து ஒலிக்க செய்ய வேண்டும். பாதசாரிகள் சாலைகளை கடக்கும் இடத்தில் ஒலிஅறிவிப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.