மூன்று சக்கர வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி, நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூகநலத்திட்ட துணை கலெக்டர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.இன்று (டிச.3) மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தவழும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் காந்தி மியூசியத்தில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார். தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் புஷ்பராஜ், பொதுச்செயலாளர் சொர்க்கம் ராஜா தலைமை வகித்தனர்.மாவட்ட தலைவர் சுரேஷ்பாண்டியன், ஆலோசகர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ''மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாகவும், தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20 ஆயிரமாகவும் வழங்க வேண்டும்'' என மனுஅளித்தனர்.டி.கல்லுப்பட்டி மாற்றுத்திறனாளி முத்துசாமி அளித்த மனுவில், ''முதுகு தண்டுவடம் பாதித்ததால் 8 ஆண்டுகளாக செயல்பட முடியாத நிலையில் உள்ளேன்.டி.கல்லுப்பட்டி ஒன்றிய வணிக கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடைகளில் ஒதுக்கீடு பெற மனு அளித்தேன். ஆனால் அதனை பினாமி பெயரில் ஒதுக்கீடு செய்துள்ளனர். 20 கடைகளுக்கு குறைவாக இருந்தால் ஒரு கடையும், 20 க்கு மேல் இருந்தால் 5 சதவீத கடைகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க அரசாணை உள்ளது. ஆனால் எனக்கு பரிந்துரை செய்தும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.சுந்தரங்குண்டு பாரதி அளித்த மனு: கருக்குவாய்ப்பட்டி கிராமத்தில் நீண்ட நாட்களாக கழிவுநீர் வாய்க்கால் இல்லை. பள்ளி வாசலில் கழிவுநீர் தேங்குவதால் பள்ளிக்குள் செல்ல முடியவில்லை. கழிவுநீர் செல்வதற்கு வேண்டிய இடத்தை அளிக்க கிராமத்தினர் தயாராகஉள்ளோம். எனவே வாய்க்கால் அமைத்திட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.