உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒழுங்கு நடவடிக்கை, ஓய்வூதியம் தாமதம் அரசு செயலரிடம் வட்டி வசூல் உயர்நீதிமன்றம் உத்தரவு

ஒழுங்கு நடவடிக்கை, ஓய்வூதியம் தாமதம் அரசு செயலரிடம் வட்டி வசூல் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓய்வுக்கால பலன்களை வட்டியுடன் வழங்குவதில் அரசுக்கு ஏற்படும் இழப்பை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான தமிழக நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலரிடம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தமிழக நெடுஞ்சாலைத்துறையில் கோட்டப் பொறியாளராக ராமசுப்பு என்பவர் பணிபுரிந்தார். அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை (சார்ஜ் மெமோ) 2010ல் வழங்கப்பட்டது. ராமசுப்பு விளக்கம் சமர்ப்பித்தார். 2011 ஜூன் 30ல் ஓய்வு பெறவிருந்த நிலையில் ஜூன் 24ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசாரணை நடவடிக்கைகளை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி ராமசுப்பு உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணையை 4 மாதங்களில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின் 2011 ல் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் 2013ல் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். அதனடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார். 2011 ஜூன் 30 முதல் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார். ஓய்வூதியம் மற்றும் இதர பலன்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வட்டியுடன் வழங்க உத்தரவிட உயர்நீதிமன்றத்தில் ராமசுப்பு மனு செய்தார். தனி நீதிபதி,'ஓய்வுக்கால பலன்களை வட்டியுடன் தமிழக அரசு வழங்க வேண்டும்,' என 2023ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்துறை கூடுதல் தலைமைச் செயலர், நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஜெனரல் மேல்முறையீடு செய்தனர்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.'ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள் 2016 ஜூன் 10 ல் முடிவடைந்தது. அத்தேதியிலிருந்து வட்டி வழங்கப்படும்,' என அரசு தரப்பு தெரிவித்தது. இதை எங்களால் ஏற்க முடியவில்லை. ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் ராமசுப்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது விசாரணை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பின் திரும்பப் பெறப்பட்டது. அறிக்கையின் மீது உத்தரவு பிறப்பிக்குமாறு ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிக்கு ராமசுப்பு 2014 மற்றும் 2015 ல் மனு அனுப்பினார். ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நடவடிக்கையை முடித்து 2016 ஜூன் 10ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் காலதாமதம் ஏற்பட்டதற்கு அவர்தான் பொறுப்பு.தாமதத்தின் விளைவாக 2011 அக்.1 முதல் 2017 பிப்.,28 வரை வட்டி வழங்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியின் தாமதம் காரணமாக, ராமசுப்பு பாதிக்கப்பட முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்கிறோம். வட்டியால் அரசுக்கு ஏற்படும் இழப்பை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியிடமிருந்து வசூலிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து 2025 பிப்ரவரியில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !