அமைச்சர் தொகுதியில் இன்னும் தீபாவளி கவனிப்பு நடக்கல... ஏமாற்றத்தில் தி.மு.க., நிர்வாகிகள்
மதுரை: மதுரையில் அமைச்சர் தியாகராஜனின் மத்திய தொகுதி தி.மு.க., நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமையின் தீபாவளி பணம் நேற்றுவரை கிடைக்கவில்லை என சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்தாண்டு தீபாவளிக்கு நிர்வாகிகளை 'கவனிக்க' தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் வழியாக 'கவனிப்பு' பணிகள் நடக்கின்றன. மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தலா ரூ.1 லட்சம், வட்டச் செயலாளர்களுக்கு ரூ.40 முதல் 50 ஆயிரம், பகுதிச் செயலாளர்களுக்கு ரூ.ஒன்றரை லட்சம், நிர்வாகிகளுக்கு தலா ரூ.ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மதுரை மத்திய தொகுதியில் 90 சதவீதம் பேருக்கு இத்தொகை இதுவரை கிடைக்கவில்லை. இதனால் நிர்வாகிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்கள் கூறியதாவது: மதுரை வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்டத்தில் மணிமாறன், நகர் தி.மு.க.,வுக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கு தளபதி மூலம் தீபாவளி பணம் பட்டுவாடா முடிந்து விட்டது. ஆனால் மத்திய தொகுதியில் மட்டும் கவுன்சிலர்கள், வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு இன்னும் பட்டுவாடா நடக்கவில்லை. அமைச்சர் ஆதரவாளர்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் 'கவனிப்பு' நடந்துள்ளது. அமைச்சர் வழங்குவார் என மாவட்டச் செயலாளரும், மாவட்டச் செயலாளர் வழங்குவார் என அமைச்சரும் நினைத்துவிட்டதால் பலருக்கு இன்னும் தீபாவளி தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து தி.மு.க., தலைமை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர்.