தி.மு.க., கவுன்சிலர்கள் ஆலோசனை மேயருக்கு எதிராக முடிவு
மதுரை: மதுரையில் தி.மு.க., நகர் செயலாளர் தளபதி தலைமையில் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் அவசரக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது.இதில் நகர் தி.மு.க.,வுக்கு உட்பட்ட 40 வார்டு கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளரான மேயர் இந்திராணி பொன்வசந்திற்கும், நகர் செயலாளர் தளபதிக்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தன் கட்டுப்பாட்டில் உள்ள கவுன்சிலர்களை அழைத்து மேயரை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளில் இறங்கும்படி கூறியுள்ளார். குறிப்பாக வார்டு பிரச்னைகள் குறித்து மேயரிடம் மட்டுமே விவாதிக்க வேண்டும். அவரது கணவரிடம் விவாதிக்க கூடாது என தெரிவித்துள்ளார், என்றனர்.இதுகுறித்து தளபதி கூறுகையில், வார்டு பிரச்னைகள் குறித்து எங்கள் கட்சி கவுன்சிலர்களிடம் விவாதித்தேன். பிரச்னைகள் குறித்து மேயரிடம் மட்டும் பேச வேண்டும். அவர் கணவரிடம் பேச வேண்டாம் என அறிவுரை வழங்கினேன். மாநகராட்சி நிர்வாகத்தில் மேயர் கணவர் தலையீடு இருப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். மேயருக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது என கூறவில்லை என்றார்.மேயர் தரப்பினர் கூறுகையில், மாநகராட்சியில் நடக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பலர் 'கட்டிங்' கேட்கின்றனர். யாரையும் திருப்திபடுத்த முடியவில்லை. இதனால் மேயருக்கு எதிரான நிலைப்பாட்டை கவுன்சிலர்களை எடுக்க வைத்துள்ளனர். கட்சி தலைமையிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்றனர்.