பா.ஜ.,பாலிசியை பின்பற்றும் தி.மு.க.,; கரும்பு விவசாயிகள் கொதிப்பு
மதுரை; ''பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் தான் பா.ஜ., கட்சியை எதிர்க்கிறோம். அதே பாலிசியைத் தான் தி.மு.க.,வும் பின்பற்றுகிறதா'' என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில துணைத்தலைவர் பழனிசாமி கேள்வியெழுப்பினார். மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். பழனிசாமி பேசியதாவது: தி.மு.க., வாக்குறுதி படி நான்காண்டுகளாக ஆலையை திறக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆய்வுக்குழு அமைத்து இந்த ஆலையை திறப்பதற்கு ரூ.21 கோடி தேவை என 2023 ல் அரசு அறிவித்தது. சட்டசபையிலும் ஆலையை திறக்கப் போகிறோம் என்றது. தற்போதைய நிலவரப்படி கரும்பு விவசாயிகளுக்கு மட்டும் தான் ஓரளவு கட்டுப்படியான விலையாக டன்னுக்கு ரூ.4000 வரை கிடைக்கிறது. இங்குள்ள கரும்புகளை பதிவு செய்வதற்கு ஒரு அதிகாரியைகூட விட்டு வைக்காமல் எல்லோரையும் பிற ஆலைகளுக்கு அனுப்பி விட்டனர். இப்போதும் 4000 ஏக்கர் கரும்புகள் இங்குள்ளன. ஆலை திறந்தால் இங்கேயே கொடுக்க முடியும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் தான் பா.ஜ., கட்சியை எதிர்க்கிறோம். அதே பாலிசியைத் தான் தி.மு.க., வும் பின்பற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றார். கட்சி நிர்வாகிகள் ரவீந்திரன், ராஜேந்திரன், பொன்னுத்தாய், பாலா, செல்லக்கண்ணு பேசினர்.