உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட்கள் அரசியலால் தி.மு.க., அப்செட் ; புதிய மேயரை விரைவில் தேர்வு செய்ய போர்க்கொடி

மதுரை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட்கள் அரசியலால் தி.மு.க., அப்செட் ; புதிய மேயரை விரைவில் தேர்வு செய்ய போர்க்கொடி

மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடு விவகாரத்தால் தி.மு.க., மேயர் பதவியை பலி கொடுத்தது. தற்போது பொறுப்பில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துணைமேயர் நாகராஜன் அன்றாட ஆய்வுகள் என்ற பெயரில் நடத்தும் 'அரசியலால்' தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'டில் உள்ளனர். புதிய மேயரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என அவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்வு செய்யும் விஷயத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையே போட்டி இருந்தாலும் மூர்த்தி கையே ஓங்கியுள்ளது. ஆனாலும் புதிய மேயரை தேர்வு செய்வது தள்ளிப்போகிறது. இதனால் துணைமேயர் என்றாலும் அறிவிக்கப்படாத 'மேயர்' போல் அவர் ஆய்வுகளை மேற்கொண்டு, மாநகராட்சி அதிகாரிகளை தான் செல்லும் இடங்களுக்கே வரவழைக்கிறார். நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். நாளிதழ்களில் வெளியாகும் மாநகராட்சி குறைகள் தொடர்பான செய்திகள் தொடர்பாக, அதிகாரிகளிடம் ஆலோசிப்பதுடன், களஆய்வுகளையும் மேற்கொள்கிறார். இதனால், '69 கவுன்சிலர்களுடன் ஆளுங்கட்சியாக இருந்தும் மேயர் பதவியை அனுபவிக்க முடியலையே' என மேயர் போட்டியில் உள்ள தி.மு.க., கவுன்சிலர்கள் கொந்தளிக்கின்றனர். தி.மு.க., வினர் கூறியதாவது: மாநகராட்சி துணைமேயர் பதவி தி.மு.க., கவுன்சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் உட்கட்சி அரசியலால், மார்க்சிஸ்ட் எம்.பி.,வெங்கடேசன், உள்ளூர் அமைச்சர், மாவட்ட செயலாளர் கூட்டணி அப்பதவியை, 4 கவுன்சிலர்களை கொண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு தாரைவார்த்தது. தற்போது அதிர்ஷ்டவசமாக மேயர் பதவியில் செயல்படவும் அக்கட்சிக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை துணைமேயர் சரியாக பயன்படுத்துகிறார். அன்று துணைமேயர் பதவியை கூட்டணிக்கு தாரை வார்த்தவர்களும் இன்று 'அய்யோ' என வயிற்றில் அடித்துக்கொள்கின்றனர். எனவே நவம்பரில் மாமன்றக் கூட்டம் நடப்பதற்கு முன் தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலரை மேயராக கட்சித் தலைமை தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் தி.மு.க.,வினரை கடுப்பேற்றும் மார்க்சிஸ்ட்களின் அரசியல் தொடரும். இதனால் கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்னைதான் ஏற்படும் என்றனர்.

போராட்டத்திலும் மார்க்சிஸ்ட்கள் 'லாபி'

மாநகராட்சியில் துாய்மை பணி மேற்கொள்ளும் 'அவர் லேண்ட்' நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியில் இடம் பெற்ற அமைப்புகள் உள்ளிட்ட சங்கங்கள் போராட்டம் அறிவித்தது. இதனால் மேயர், கமிஷனருக்கு நெருக்கடி ஏற்படும் நிலை இருந்தது. ஆனால் இந்திராணி (தி.மு.க.,) மேயர் பதவியை ராஜினாமா செய்த பின் துணைமேயர் நாகராஜன் அந்த பொறுப்புக்கு வந்ததால் அவருக்கு நெருக்கடி கொடுக்க விரும்பாமல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதன் பின்னணியில் மார்க்சிஸ்ட்களின் 'அரசியல் லாபி' செய்து தி.மு.க., தலைமை வரை கொண்டு சென்றதுடன், நற்பெயரையும் அறுவடை செய்தது. ஆனால் அவர் லேண்ட் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கனவே நீக்கப்பட்ட 23 துாய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்த அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், கமிஷனர் சித்ரா நடவடிக்கைகள் மறைக்கப்பட்டது. இதனாலும் மார்க்சிஸ்ட் கட்சி மீது அதிருப்தியில் உள்ளதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ