உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் காரசாரம்; தி.மு.க.,- வி.சி., மோதல்; ஜாதி பெயரை நீக்கும் அரசு உத்தரவுக்கு அ.தி.மு.க., எதிர்ப்பு

மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் காரசாரம்; தி.மு.க.,- வி.சி., மோதல்; ஜாதி பெயரை நீக்கும் அரசு உத்தரவுக்கு அ.தி.மு.க., எதிர்ப்பு

மதுரை : மதுரை குடியிருப்புகள், ரோடுகள், தெருக்களுக்கு ஜாதி பெயர்களை நீக்கி பொதுப் பெயர் வைக்க உள்ளாட்சிகளுக்கான உத்தரவை பின்பற்றுவது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் வி.சி., - தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இடையே காரசார வாக்குவாதம் நடந்தது.இக்கூட்டம் மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்தது. துணைமேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் நடந்த விவாதம்:சரணவ புவனேஸ்வரி, மண்டலம் 2 தலைவர்: பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய் பதிப்பு பணிகள் முடியவில்லை. குப்பை அகற்றுவதில் 'அவர் லேண்ட்' நிறுவனத்தில் ஆட்கள், வாகனங்கள் பற்றாக்குறையாக உள்ளது.பாண்டீஸ்வரி, மண்டலம் 3 தலைவர்: மாநகராட்சியில் எத்தனை இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எத்தனை அனுமதி பெற்றவை.மேயர்: இதே கேள்வியை கடந்த கூட்டத்திலும் கேட்டார். நகரமைப்பு பிரிவில் ஏன் கொடுக்கவில்லை.விபரம் அளியுங்கள்.சுவிதா, மண்டலம் 5 தலைவர்: புதிய ரோடுகளுக்கு நிதி ஒதுக்கிய மேயர், கமிஷனருக்கு நன்றி. தெரு விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லை. முறையாக குப்பை அள்ளாத 'அவர் லேண்ட்' நிறுவனத்தால் பல பிரச்னை ஏற்படுகிறது. 'டப்பர் பின்' பழுதாக உள்ளன. போதிய வாகனங்கள் இல்லை. மக்கள் தொகைக்கு ஏற்ற பணியாளர்கள் இல்லை. பம்பிங் ஸ்டேஷனில் மாற்று மோட்டார் வசதி இல்லைகமிஷனர்: பம்பிங் ஸ்டேஷன்களில் மாற்று மோட்டார் இருக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.சோலைராஜா, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்: மழைக் காலம் துவங்க போகிறது. 16 பிரதான கால்வாய் துார்வாரப்படவில்லை. கழிவுநீர் மாநகராட்சி பகுதியில் தேங்குகிறது. இன்னும் 1 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும். தற்போது புதிய ரோடுகள் அமைக்கப்படுகின்றன. ரோடுகளை சேதப்படுத்தி தான் இணைப்பு வழங்கப்படுமா. ஏலம் விடப்பட்ட 43 இனங்களுக்கு வைப்பு தொகை ஏன் பாதியாக குறைக்கப்பட்டது. இவ்விஷயத்தில் ஆளுங்கட்சியினர் சிண்டிகேட் அமைத்துள்ளனர். வைப்பு தொகையை குறைக்கக்கூடாது.கமிஷனர்: நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவுப்படியே ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சோலைராஜா: பல வார்டு களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர்த்திட்டத்தில் சாதாரண மீட்டர் பொருத்தப்பட்டால் முறைகேடுக்கு வழிவகுக்கும்.கார்த்திகேயன், காங்.,: 36வது வார்டு வ.உ.சி., தெரு உள்ளிட்ட பகுதிக ளில் பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்பு பணி துவங்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் இனி பணிகள் மேற்கொள்ள முடியாது என்கின்றனர். பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மக்கள் போராட்டம் நடத்த உள்ளனர். நானும் பங்கேற்பேன்.கமிஷனர்: ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.பாஸ்கரன், ம.தி.மு.க.,: தெற்கு மாசி வீதிகளில் குப்பை அகற்றுவதில்லை. மீனாட்சி கோயிலை சுற்றி குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் அறை ஏற்படுத்த வேண்டும்.முனியாண்டி, வி.சி.,: மாநகராட்சியில் உள்ள குடியிருப்பு, தெரு, ரோடுகளின் ஜாதி பெயர்களை அகற்றுவது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் பாரபட்சம் உள்ளது. அது தொடர்பான விபரம் கேட்கப்படுகிறது. இந்த சுற்றறிக்கை குறித்து எனக்கு தகவல் இல்லை. முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயசந்திரன் (சுயே.,): உறுப்பினர் சுற்றறிக்கையை தவறாக புரிந்துள்ளார். ஜாதி என்பது தனி மனிதன் உரிமை. ஜாதியில் ஏற்றத்தாழ்வு இல்லை என அம்பேத்காரும், முத்துராமலிங்க தேவரும் ஒரே சிந்தனை கொண்டவர்கள். தெரு, ரோடுகளுக்கு ஜாதியுடன் உள்ள பெயர்களில் ஜாதியை மட்டும் நீக்க வேண்டும். முழுவதையும் நீக்க தேவையில்லை. இதற்கு முனியாண்டி 'இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது எடுக்கப்படவில்லை' என குற்றம் சாட்டினார். அப்போது தி.மு.க., கவுன்சிலர்கள் பலர் அதிருப்தி தெரிவித்தனர். இருதரப்பினருக்குள் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது)சோலைராஜா: தி.மு.க., அரசு ஏன் இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தேவையில்லாத விவாதத்திற்கு இது வழிவகுக்கிறது. தற்போதுள்ள நிலையே தொடந்தால் பிரச்னை எழாது.மேயர்: எல்லோரும் அண்ணன் தம்பியாக பழகுகிறோம். நாம் மனிதர்கள் தானே. இந்த விவாதத்தை முடியுங்கள்.இவ்வாறு விவாதம் நடந்தது.

உங்க 'பஞ்சாயத்தை' வெளியே வையுங்கள்: மேயர்

கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் நுார்ஜஹான் பேசுகையில், குப்பை அள்ளும் அவர் லேண்ட் நிறுவனத்தில் போதிய வாகனம், தொழிலாளர்கள் இல்லை. ஒரே குடும்பத்தில் 5 தொழிலாளர் இருந்து, ஒருவர் மட்டுமே வேலைக்கு வருகிறார். எனது 54 வது வார்டுக்கு ஒரு வேலையும் இதுவரை நடக்கவில்லை. மண்டலத்திற்கு ஒதுக்கப்படும் நிதி விவரம் தெரிவதில்லை. பணிகள் வேண்டும் என அமைச்சர், மேயர், கமிஷனருக்கு வைத்த கடிதங்களும் திரும்புகின்றன என்றார். இதற்கு பதில் அளித்த மண்டல தலைவர் பாண்டீஸ்வரி தவறான தகவலை தெரிவிக்க வேண்டாம். பணிகள் நடந்துள்ளது. என பதில் அளித்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது மேயர், உங்க பஞ்சாயத்தை வெளியே வைத்துக்கொள்ளுங்கள் என அமைதிப்படுத்தினார்.

அப்பா... மாமா... அக்கா; கவுன்சிலர்கள் கல...கல...

n கூட்டத்தில் பேசிய பெண் கவுன்சிலர்கள் எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி ஆகியோரை குறிப்பிடும்போது அப்பா, மாமா, அக்கா என உறவுமுறை சொல்லி அழைத்தனர்.n அ.தி.மு.க., கவுன்சிலர் சண்முகவள்ளி பேசுகையில், என்.எம்.ஆர்., மெயின் ரோடு 2023ல் அமைத்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த ரோடு 2013ல் அமைத்தது. அதை திருத்தி, வார்டில் புதிய ரோடு அமைத்துக்கொடுங்கள் என்றார்.n கவுன்சிலர் ஜென்னியம்மாள் முன்கூட்டியே எழுதிக்கொடுக்காதது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு எழுதிக்கொடுத்ததை மட்டும் பேசுங்கள். அப்போது தான் நாங்கள் பதில் சொல்ல முடியும் என மேயர் கண்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை