மேலும் செய்திகள்
கோடை உழவால் நன்மைகள்; வேளாண் துறையினர் அறிவுரை
07-Apr-2025
மதுரை: மண் வளத்தை மேம்படுத்தி பயிர் மகசூலை அதிகரிக்க வேண்டுமெனில் விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குநர் கமலா லட்சுமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கோடை உழவு ஆண்டுக்கு ஒருமுறை வரும். பயிர் அறுவடையான உடன் நிலத்தை தரிசாக விடாமல் இரும்பு கலப்பை, வளைப்பலகை கலப்பை, சட்டிக் கலப்பை, கொத்து கலப்பை ஏதாவது ஒன்றால் நிலத்தை ஆழமாக உழவேண்டும். மண்ணை கீழ் மேலாக புரட்டும் போது மண்ணுக்குள் உள்ள கிருமிகள், புழு, பூச்சிகள் இறந்துவிடும். மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும். ஆழ்குழாய் கிணற்றுப் பாசனம் மூலம் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கோடை உழவுடன் சணப்பை, தக்கைப்பூ போன்ற பசுந்தாள் உரப்பயிர் ஏதாவது ஒன்றை விதைக்க வேண்டும். பின் 45 நாட்களில் மடக்கி உழவு செய்தால் குறுவைப் பயிருக்கு வளமான பசுந்தாள் உரம் கிடைக்கும். இவை காற்றில் உள்ள நைட்ரஜனை வேர்முடிச்சுகளில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் நிலைப்படுத்தி மண்ணை வளமாக்குகின்றன. மேலும் களைகள் முளைப்பதை தடுக்கிறது என்றார்.
07-Apr-2025