உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்டர்நெட் டாக்டர்களை நம்ப வேண்டாம் மார்பக புற்றுநோய் குறித்து கலெக்டர் தகவல்

இன்டர்நெட் டாக்டர்களை நம்ப வேண்டாம் மார்பக புற்றுநோய் குறித்து கலெக்டர் தகவல்

மதுரை: ''அக்கம்பக்கத்தினர், உறவினர் சொல்வதை கேட்டும் 'இன்டர்நெட் டாக்டர்களின்' அறிவுரையை கேட்டும் பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது'' என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரை கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்களுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் சிறப்புக் கருத்தரங்கு நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார். கலெக்டர் பிரவீன்குமார் பேசியதாவது: 'சோலார் சிஸ்டம்' போல பெண்களைச் சுற்றி தான் குடும்பமே இயங்குகிறது. தங்களது உடல்நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு உள்ளது. சில 'இன்டர்நெட் டாக்டர்களின்' போலியான தகவல்களை பார்த்து கடந்து செல்லாமல், மார்பகத்தில் ஏதேனும் வித்தியாசமாக தெரிந்தால் உண்மையான டாக்டரிடம் செல்ல வேண்டும் என்றார். புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் ரமேஷ் பேசுகையில்,''அரசு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் உட்பட நவீன வசதிகள் உள்ளன. நெறிகட்டியில் துல்லியமாக பரவியிருக்கும் புற்றுநோயை கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு உதவும் ரூ.ஒன்றரை கோடி மதிப்பிலான ஐ.சி.ஜி., ஸ்கேன், சினைப்பை புற்றுநோய்க்கு வயிற்றுக்குள் நேரடியாக கீமோதெரபி மருந்தை செலுத்தும் வகையான ரூ.ஒரு கோடி மதிப்பிலான 'ஹைபெக்' இயந்திரங்கள் நவம்பர் இறுதிக்குள் இம்மருத்துவமனைக்கு வந்து விடும்'' என்றார். புற்றுநோயிலிருந்து மீண்ட புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பசுபதி பேசுகையில், '' எனக்கு வலதுபக்க மார்பகத்தில் கட்டி உள்வாங்கியிருந்தது. இங்கு மார்பகத்தை அகற்றாமல் புற்றுநோய் கட்டியை மட்டும் அகற்றி டாக்டர்கள் வாழ்வளித்தனர். இப்போது நோயிலிருந்து முழுமையாக மீண்டதால் மருந்து, மாத்திரை தேவைப்படவில்லை. பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து கவனமாக இருக்க வேண்டும்'' என்றார். துணைமுதல்வர் மல்லிகா, டாக்டர்கள் ராஜசேகர், செல்வராணி, குருமூர்த்தி, சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

சட்டை கலரை மறந்த கலெக்டர்

நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர், 'அரவிந்த்கண் மருத்துவமனைக்கு சென்ற போது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான 'பிங்க் அக்டோபரை' நினைத்துக் கொண்டு 'பிங்க்' நிற சட்டை அணிந்து சென்றேன். அது வேறு நிகழ்ச்சி என்பது அப்போது தான் தெரிந்தது. இன்று 'பிங்க்' சட்டை அணிந்து வரவில்லை. எனக்கு பதிலாக துறைத்தலைவர் ரமேஷ் முழுமையான 'பிங்க்' நிற சட்டை அணிந்து பொருத்தமாக வந்துள்ளார்' என்றதும் அனைவரும் ரசித்து கைதட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை