கள்ளிக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு
திருமங்கலம்:கள்ளிக்குடி ஒன்றியம் கே. வெள்ளாகுளத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 10 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இயந்திரத்தில் ரூ.2 நாணயம் செலுத்தி ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. முறையான பராமரிப்பு எதுவும் செய்யாததால் சமீபத்தில் தண்ணீர் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது. தற்போது ஒரு குடம் தண்ணீருக்கு ரூ.5 நாணயம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தும் முறையாக தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை. தண்ணீர் வழங்கும் இயந்திரத்தை பராமரிக்க வேண்டிய ஊராட்சி செயலாளர், தண்ணீர் வழங்குபவர்கள் வசூலில் மட்டுமே குறியாக உள்ளனர். தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்து கிராம மக்கள் தண்ணீர் பிடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பள்ளி. கல்லுாரி, பணிக்கு, அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல இயலாமல் அவதிப்படுகின்றனர் . மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தண்ணீர் வழங்கும் இயந்திரத்தை முறையாக பராமரிக்கவும், வசூல் பணத்தை இயந்திர பராமரிப்பு, குடிநீர் வினியோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.