புகை பிடிப்பவர்களுக்கு அடிக்கடி இருமலா முகாமில் கண்டறிந்த நபருக்கு அவசர சிகிச்சை
மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில் சிகிச்சை பெற வந்தவருக்கு 'டிஜிட்டல் எக்ஸ்ரே' பார்த்ததில் நுரையீரல் சவ்வின் இடையே காற்று தேங்கியது கண்டறியப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாணிக்கம் தாகூர் எம்.பி., முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்களை வழங்கினார். அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு வந்த செக்கானுாரணியைச் சேர்ந்த 52 வயது நபர் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி இருப்ப தாக தெரிவித்தார். டாக்டர் யாழினி டிஜிட்டல் எக்ஸ்ரே பரிசோதனை செய்த போது அவரது இடது நுரையீரல் சுருங்கியும் வெளியே சவ்வுப்பகுதியில் காற்று கசிவு இருந்தது கண்டறியப்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ்குமார் கூறியதாவது: இவருக்கு புகைப்பழக்கம் இருந்ததால் இளைப்பும் மூச்சுதிணறலும் இருந்துள்ளது. நுரையீரல் புண்ணாகும் போது ஓட்டை விழுந்து நாம் சுவாசிக்கும் காற்று நெஞ்சுக்கூட்டுக்குள் கசிய ஆரம்பிக்கும். இந்த காற்று வெளியேற முடியாமல் நுரையீரலுக்கு வெளியே சவ்வுப்பகுதியில் அடைத்து நிற்பதால் பலுான் போல் இருக்கும் நுரையீரல் சுருங்கிக் கொண்டே வரும். இதனால் நோயாளிகள் மூச்சுவிட முடியாது. இவரது நுரையீரலுக்கு வெளியே சவ்வுப்பகுதியில் காற்றும், நீரும் தேங்கியிருந்தது. அறுவை சிகிச்சை மூலம் விலா எலும்புகளுக்கு இடையே சிறிய குழாய் பொருத்தி காற்று, நீரை வெளியேற்றச் செய்தோம். நுரையீரல் மீண்டும் விரிவடைந்ததால் இயல்பாக சுவாசிக்கிறார். நுரையீரல் புண் ஆறியபின் பத்து நாட்களுக்குள் அந்த குழாய் அகற்றப்படும். சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்தால் இவருக்கு காசநோய் அல்லது நிமோனியா தாக்குதலா என தெரியவரும். அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும். அலட்சியம் வேண்டாம் புகைப்பதால் தான் இருமல் வருகிறது என புகைப்பிடிப்பவர்கள் இருமலை அலட்சியப்படுத்துகின்றனர். காசநோய் அல்லது நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் கூட இருமலுக்கு காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் காற்றுப்பை வீங்கிக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில் காற்றுப்பை வெடித்து நுரையீரலுக்கு வெளியே காற்று தேங்கும். எனவே இருமல், மூச்சுதிணறல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றார்.