மழை இன்றி கருகும் மானாவாரி பயிர்கள்; பேரையூர் விவசாயிகள் கவலை
பேரையூர் : பேரையூர் பகுதியில் மழை இல்லாமல் மானாவாரி நிலங்களில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடந்த ஆடிப்பட்டத்தில் பெய்த மழையை நம்பி இப்பகுதியில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், பருத்தி, சோளம், கம்பு, உளுந்து, பாசி விதைகளை விதைத்தனர். தொடர்ந்து மழை பெய்யாததால் விதைகள் முளைத்து கருகின. மீண்டும் உழவு செய்து மறு விதைப்பு விதைத்தனர். விதைத்த சில நாட்களில் பெய்த மழையால் இந்த விதைகள் நன்றாக முளைவிட்டு கிளம்பியது. அதன் பின் ஒரு மாத காலமாக மழை பெய்யாமல் வெயில் வாட்டி வதைப்பதால், முளைவிட்ட பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: விதைப்புக்குப் பிறகு வளர்ச்சி தருணத்தில் மழை பெய்யவில்லை. மானாவாரி பயிர்களின் வளர்ச்சி வெகுவாக கருகிவிட்டது. மானாவாரி சாகுபடியில் பல ஆண்டுகளாக போதிய அளவு விளைச்சல் கிடைக்கவில்லை. இரண்டு முறை உழவு செய்து மக்காச்சோளம் விதைத்ததில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்திற்கு மேல் நஷ்டம். இனி மழை பெய்தால் 3வது முறையாக விதைக்க வேண்டும். தொடர்ச்சியாக சில ஆண்டுகளாக அரசு நஷ்ட ஈடு வழங்கவில்லை. பயிர் காப்பீடு செய்துள்ளோம். இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.