UPDATED : ஜன 20, 2024 06:27 AM | ADDED : ஜன 20, 2024 04:57 AM
கூட்டத்திற்கு கலெக்டர்சங்கீதா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சக்திவேல், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் ராணி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் கலந்து கொண்டனர்.கடந்த மாத மனுக்கள் மீதான விவாதம்:அருண், கஸ்துாரி, கொட்டம்பட்டி: தென்னை மரங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதில்லை. இழப்பு வரும் போது நஷ்டத்தை சந்திக்கிறோம். வேளாண் துறையிடம் கேட்டால் தோட்டக்கலைத்துறைக்கு பயிரை மாற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்கு உதவுவதில்லை.ஜெயப்பிரகாஷ் நாராயணன், அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் கல்லணை பகுதி கழிவுநீர் எனது வயலில் தேங்குகிறது. கலெக்டராக இருந்த அனீஷ்சேகரிடம் ஆரம்பித்து உங்களிடமே (கலெக்டர்) 3 முறை மனு கொடுத்தேன். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில்சுத்திகரிப்பு மையம் அமைக்க மண் மாதிரி எடுக்கப்பட்டுள்ளதாக அலங்காநல்லுார் நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை எங்கு விடுவர் என்ற திட்டம் இல்லை.சீத்தாராமன், ஒத்தக்கடை: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.250க்கு யூரியா வாங்கச் சென்றால் ரூ.600க்கு தனியார் தயாரிப்பு உரங்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.முருகன், அரிட்டாபட்டி: தோட்டத்தில் உள்ள விவசாய கிணறு சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்தது. இழப்பீடு வழங்க வேண்டும்.மணிகண்டன், உசிலம்பட்டி : 58ம் கால்வாய்க்கு டிச.,23 முதல் 100 கனஅடி தண்ணீர் தான் திறந்து விடப்படுகிறது. 316 கனஅடி விட வேண்டும். தண்ணீர் குறைவாக திறந்து விடப்படுவதால் கண்மாய்கள் நிறையவில்லை.துரைசிங்கம், வெள்ளரிபட்டி: செல்லப்பன் கோட்டை வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மனு கொடுத்து ஒரு பயனும் இல்லை.பனையூர், ராஜ்குமார்: பனையூர் வாய்க்கால் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படவில்லை.பாண்டி, கொட்டக்குடி: பெருமாள்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி கரை அமைக்க வேண்டும்.பழனிசாமி, மேலுார்: அலங்காநல்லுார் சர்க்கரை ஆலைக்கு போதுமான அளவு கரும்பு பதியப்பட்டுள்ளதால் ஆலையை திறக்க வேண்டும்.ராமன், நடுமுதலைக்குளம்: முதலைக்குளம் முதல் கோவிலாங்குளம் உட்பட10 கண்மாய்களுக்கு செல்லும் மண் கால்வாய்களை சிமென்ட் கால்வாயாக மாற்ற வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.செல்லம்பட்டி விக்கிரமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள 300 ஏக்கர் நெற்பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதாகவும் பேரையூர் எம்.கல்லுப்பட்டி பகுதியில் விளைந்த நெற்கதிர்களை ஒற்றை யானை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கலெக்டர் சங்கீதா பேசுகையில், ''அரவைக்கு தேவையான ஒரு லட்சம்டன் அளவு கரும்பு இருந்தால் ஆலை திறக்கப்படும். கல்லணையில் விவசாய நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க ஏற்பாடு செய்யப்படும். வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வனத்துறை மூலம் விலங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.