குறைதீர் கூட்டத்தில் தினமலர் நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி
மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் தங்களுடைய பிரச்னைகள், தேவைகள் குறித்து பேசினர்.மேலுார் பகுதியில் விரைவில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். பெரிய அருவி நீர் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்ததால் கேசம்பட்டி, சேக்கிபட்டி, கம்பூர் பகுதி கண்மாய்கள் நிரம்பியதால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதற்கு உதவிய தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.கொட்டாம்பட்டி பகுதிக்கு புதிய கால்வாய் வெட்டி பெரியாறு, வைகை நீரை கொண்டுவர வேண்டும்.ரூ. 27 கோடி நிதி ஒதுக்கி அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். பழுதான இலுப்பகுடி கால்வாயை சரி செய்ய வேண்டும். திருவாதவூரில் துாங்கனேந்தல், மறிச்சி கட்டி கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. புது சுக்காம்பட்டியில் சிறு மேளம் கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.கீரனுார் பகுதிகளில் காட்டுப் பன்றிகளால் விவசாயம் பாதிக்கிறது.இப்பகுதியில் வேளாண் உபகரணங்கள் வழங்கவில்லை. 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லையும் அதிகாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும். செந்தாழை நோயால் மகசூல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.