தமிழகத்தில் காலாவதி ஆண்டு முடிந்தும் இயக்கப்படும் தீயணைப்பு வாகனங்கள் செப்டம்பருக்குள் கெடு முடிகிறது
மதுரை: தமிழகத்தில் காலாவதி ஆண்டு முடிந்தும் 'நல்ல நிலையில்' தீயணைப்பு வண்டிகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் அதில் நவீன உபகரணங்கள் இல்லாததால் வீரர்கள் சிரமப்படுகின்றனர்.தீயணைப்புத்துறையில் 342 வண்டிகள், 39 தண்ணீர் லாரிகள், 93 அதிவிரைவு வண்டிகள், 19 அவசர கால வண்டிகள், 5 மினி பஸ்கள், 58 தீயணைப்பு டூவீலர்கள் உள்ளன. மத்திய அரசு உத்தரவுபடி அரசு வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு பின் அது காலாவதியானதாக கருதப்பட்டு புதிய வாகனங்கள் வாங்கப்படும். ஆனால் தீயணைப்பு வண்டிகள் பெரும்பாலானவை 15 ஆண்டுகளை தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை காலாவதி ஆண்டு நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஏற்கனவே காலாவதி ஆண்டு முடிந்தும் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகளுக்கு இந்தாண்டு செப்டம்பருடன் காலாவதி தேதி முடிவடைகிறது. இதன்பிறகு மீண்டும் காலாவதி ஆண்டு நீடிக்கப்பட உள்ளது.தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:'சர்வீஸ்' செய்து நல்ல நிலையில் வைத்திருப்பதால் இதுவரை எந்த பிரச்னையும் இல்லாமல் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.ஆனால் மத்திய அரசு உத்தரவுபடி 15 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வாகனங்கள் வாங்கப்பட வேண்டும்.போலீஸ் வாகனங்கள் இம்முறையில் வாங்கப்படுகின்றன. ஆனால் தீயணைப்பு வாகனங்கள் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. நவீன காலத்திற்கேற்ப உபகரணங்கள் கூடியவை இருந்தால்தான் மீட்புப்பணிகளை எளிதாக கையாள முடியும்.இதுகுறித்து துறை இயக்குனர் சீமா அகர்வால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.