மேம்பாலங்கள், வடகரை ரோடு: தலைமை பொறியாளர் ஆய்வு
மதுரை: 'மதுரையில் பால பணிகளை தாமதமின்றி குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்' என தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ் உத்தரவிட்டார்.கோரிப்பாளையம், மேலமடை சந்திப்புகளில் முறையே ரூ.176 கோடி, ரூ.150 கோடி செலவில் மேம்பாலங்கள், வைகை வடகரையில் பாத்திமா கல்லுாரி அருகே ரூ.150 கோடி செலவில் செங்கோல் நகர் முதல் சமயநல்லுார் வரை 8 கி.மீ., ஆற்றோரம் ரோடு என பணிகள் நடந்து வருகின்றன.கோரிப்பாளையம், மேலமடை சந்திப்பில் 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வைகை வடகரையிலும் 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. நேற்று மாநில தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ் ஆய்வு நடத்தினார். அவரிடம் கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் ஆனந்த், சீத்தாராமன் பணிகள் குறித்து விளக்கினர்.கோரிப்பாளையம் பகுதியில் சித்திரைத் திருவிழா பக்தர்களுக்கு இடையூறின்றி பணி நடத்த வேண்டும். மேலமடை சந்திப்பில் அக்டோபருக்குள் பணிகளை முடித்து இந்தாண்டு இறுதிக்குள் பாலத்தை பயன்பாட்டுக்கு தயார்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.