ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு வெற்றி பெற வேண்டும் உணவுப் பொருள் வியாபாரிகள் யோசனை
மதுரை: 'தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை சீராக்குவது உள்ளிட்ட ஆக்கப்பூர்வ மாற்றம் அறிவிக்கப்படும்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், 'வருவாய் குறையும் என்பதற்காக சில மாநிலங்கள் எதிர்த்தால் வரி சீரமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ நிர்வாகிகள் சாய்சுப்ரமணியம், ஜெயப்பிரகாசம் கூறியதாவது: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன்பு ஜி.எஸ்.டி., தொடர்பான 32 கோரிக்கைகளுக்கான விவாதத்திற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். வணிகர்கள், பொதுமக்களுக்கான வரி விகிதத்தை சீராக்குவதன் அடிப்படையில் வரி விகிதம் குறைக்கப்படும்போது வரி வருவாய் அதிகரிக்கும். தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை சீராக்குவது உள்ளிட்ட ஆக்கப்பூர்வ மாற்றம் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரி ஏய்ப்பு செய்வோரைக் காட்டிலும் வரி செலுத்துவோர் அதிகம் என்பதால் வரி சீர்திருத்த முறையில் வரி குறைப்பு செய்யும் போது வரி வருவாய் உயரும். சில மாநிலங்கள் வருவாயில் மாநிலப் பங்கு குறைவதற்கான காரணங்களைக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கலாம். சில மாநிலங்கள் ஆட்சேபிப்பதாலும் ஒத்திவைக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்று வரி சீரமைப்பு முறையை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றனர்.