உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயணிகளின் கனிவான கவனத்திற்கு: புதுப்பொலிவுடன் தயாராகுது மதுரை ரயில்வே ஸ்டேஷன்

பயணிகளின் கனிவான கவனத்திற்கு: புதுப்பொலிவுடன் தயாராகுது மதுரை ரயில்வே ஸ்டேஷன்

மதுரை: அம்ரித் பாரத் திட்டத்தில் 2022 நவம்பரில் துவங்கிய மதுரை ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகளை 2025 நவம்பருக்குள் முடிக்க தெற்கு ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.149 ஆண்டுகள் பழமையான மதுரை ரயில்வே ஸ்டேஷன் செப். 1, 1875ல் திருச்சி முதல் மதுரை வரை இணைக்கப்பட்ட ரயில்வே பாதையில் அமைக்கப்பட்டது. தினமும் ரூ. 60 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறது. 70 பயணிகள் ரயில், 10 சரக்கு ரயில்கள், 40 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: தெற்கு ரயில்வே வாரியம் மறுசீரமைப்பு பணிகளுக்கு 2022ம் ஆண்டில் ரூ. 347 கோடியை ஒதுக்கி 36 மாதங்களுக்குள் முடிக்க ஒப்பந்த மிட்டது. இதில் கிழக்கு, மேற்கு நுழைவு வாயில்களில் மறுசீரமைப்பு, பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சுரங்கப்பாதை, கிழக்கு நுழைவாயில் பார்க்கிங் பகுதியை இணைக்கும் 2 ஸ்கை வாக் பாலம், ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் சீரான ரோடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கழிவுகளுக்கான கலெக்ஷன் சேம்பர், லிப்ட், எஸ்கலேட்டர் பணி என 30 சதவீத பணிகள் முடிந்துள்ளது என்றார்.கிழக்கு நுழைவுவாயிலில் உள்ள 2 வது தளத்தில் கூரை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் 244 நான்கு சக்கர வாகனங்கள், 451 இரு சக்கர வாகனங்கள் வரை நிறுத்தும் வசதி கொண்ட பார்க்கிங், மேற்கு பகுதியில் 61 நான்கு சக்கர வாகனங்கள் வரை அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது. கூடுதலாக கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் 700 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதிகள் அமைக்கப்படவுள்ளது.கிழக்கு, மேற்கு பகுதி கட்டடங்களை இணைக்கும் வகையில் ரயில் பாதைக்கு மேல் பயணிகள் காத்திருப்பு அரங்கு, உணவகங்கள், கழிப்பறைகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படவுள்ளது. ஸ்டேஷனில் இருந்து வெளியே வரும், உள்ளே செல்லும் பயணிகளுக்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்படவுள்ளது.நடைமேடைகளில் பார்சல் போக்குவரத்துக்கு தனி மேம்பாலம், ஸ்டேஷனில் இருந்து நேரடியாக பார்க்கிங் செல்ல 2 நடைமேடைகள் அமைக்கப்படவுள்ளது. பயணிகள் நேரடியாக பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ நிறுத்தம் செல்ல தனி நடை மேம்பாலம் அமைகிறது. இப்பணிகளை 2025, நவம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Murugan P V
அக் 03, 2024 21:39

தினமலர் நியூஸ் veryuseful


Jayaprakash Rajaram
செப் 30, 2024 06:14

பொதுமக்களுக்கு பயன்படும் சிறப்பான பணி.


Thala
செப் 30, 2024 06:08

வாழ்த்துக்கள்


Saleem
செப் 27, 2024 11:42

கோவை ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணில்கப்படுகிறது புதிய கோவை ரயில்வே கோட்டம் உருவாக்கவேண்டும்


Thala
செப் 30, 2024 06:15

வந்தேபாரத்,ஷதாப்தி, சென்னை கோவை டெய்லி 4 விரைவு ரயில் செல்கிறது.


சமீபத்திய செய்தி