குப்பை மாநகராட்சியாக மாறிவிட்டது மதுரை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குமுறல்
மதுரை: அ.தி.மு.க., ஆட்சியில் பசுமை மாநகராட்சியாக இருந்த மதுரை, தற்போது தி.மு.க., ஆட்சியில் குப்பை மாநகராட்சியாக மாறிவிட்டது என கமிஷனர் சித்ராவிடம் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.செல்லுார் ராஜூ தலைமையில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா உட்பட அக்கட்சி கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் நேற்று கமிஷனர் சித்ராவை சந்தித்தனர். அப்போது கமிஷனரிடம் செல்லுார் ராஜூ கூறியதாவது: பல்வேறு சவால்களை சமாளிக்கும் நிலையில் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளீர்கள். மாநகராட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. உதவிப் பொறியாளர்களிடையே 'ஈகோ' நீடிக்கிறது. ஒருவருக்கு பல வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பணிகள் தேங்குகிறது.நகரில் எங்குபார்த்தாலும் தற்போது குப்பை கிடக்கின்றன. சரியாக சேகரிப்பதில்லை. குப்பை அள்ளும் வாகனங்களுக்கு தகுதிச்சான்று (எப்.சி.,) இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் பசுமை மாநகராட்சியாக இருந்தது. ஆனால் தற்போது குப்பை மாநகராட்சியாக மாறிவிட்டது. பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் 2023ல் முடியும் என கூறினர். ஆனால் இன்னும் இழுத்தடிக்கப்படுகிறது.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அளித்த மனுக்களை அப்படியே கிடப்பில் போட்டுவிடாதீர்கள். நடவடிக்கை எடுங்கள் என்றார். மாநகராட்சியில் ஊழல்
பின் நிருபர்களிடம் செல்லுார் ராஜூ கூறுகையில், ''மாநகராட்சியில் வளர்ச்சி பணி நடக்கிறதோ இல்லையோ ஊழல் அதிகரித்துள்ளது. வீடு கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதி பெற்று வணிக வளாகம் கட்டப்படுகிறது. விதிமுறை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி உயரக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ஆமை வேகத்தை விட குறைவாக நடக்கிறது. 6 கமிஷனர்கள் மாறிவிட்டனர்'' என்றார்.
கமிஷனர் மவுனம்
அ.தி.மு.க.,வினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு கமிஷனர் மறுப்பு தெரிவிக்கவோ, பதில் அளிக்கவோ இல்லை. இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், ''மாநகராட்சியை குப்பை என முன்னாள் அமைச்சர் விமர்சித்தபோது ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை குறிப்பிட்டு கமிஷனர் உரிய பதில் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் பதில் அளிக்காதது அதிர்ச்சியாக உள்ளது'' என தெரிவித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'செல்லுார் ராஜூ கூறியதை கமிஷனர் எந்த அளவிற்கு புரிந்துகொண்டார் என தெரியவில்லை. விமர்சனத்திற்கு மட்டுமல்ல; 'மதுரை ராசியான இடம் கூட. விரைவில் கலெக்டராக ஆகிவிடுவீர்கள் என கமிஷனரிடம் தெரிவித்தபோதும் கமிஷனரின் முகத்தில் எந்த ரியாக்சனும் இல்லை' என்றனர்.