பவுன்சர்களை அரசியலில் ஈடுபடுத்துவது ஆபத்து காங்., எம்.பி., வேதனை
அவனியாபுரம்: 'பவுன்சர்களை அரசியலில் ஈடுபடுத்துவது மிகவும் ஆபத்தானது' என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருப்பரங்குன்றம் ஒன்றியம் வலையப்பட்டி ஊராட்சியில் ரூ. 25 லட்சத்தில் சமுதாய கூடம், சிந்தாமணியில் ரூ.12.6 லட்சத்தில் ரேஷன் கடை திறப்பு நடந்தது. இதில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாவது: தமிழக முதல்வர் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் கண்ணியத்தோடும், கவனத்தோடும் ஆட்சி நடத்துகிறார். த.வெ.க., மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய், பவுன்சர்களின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. பவுன்சர்களை அரசியலில் ஈடுபடுத்துவது மிகவும் ஆபத்தானது. விஜய்க்கு காவல்துறை, சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் பாதுகாப்பை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசியல் தலைவரான பின்பு, பவுன்சர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது நியாயமற்றது. காங்., எம்.பி., ராகுல், வாக்குத்திருட்டு குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பதிலேயே கவனமாக உள்ளார். அதற்காக அவர் யாத்திரை நடத்துகிறார். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிற மாநிலங்கள் முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போதுள்ள தேர்தல் கமிஷனர்கள் பா.ஜ., வுக்கு அடிமையாக உள்ளனர். பிரசாந்த் கிஷோர் அரசியலுக்காக, அரசியல் மாற்றத்திற்காக பல விஷயங்களை பேசக் கூடியவர். தமிழக முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை எந்த மாநிலத்தைச் சார்ந்தவர் தாக்கப்பட்டாலும், தமிழர்கள் எங்கு தாக்கப்பட்டாலும் உடனே நடவடிக்கை எடுப்பார் என்றார்.