டி.கல்லுப்பட்டியில் குப்பை நாற்றம்
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதியில் சேரும் குப்பையை குடியிருப்பு பகுதியில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இப்பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பையை தரம் பிரிக்க மதுரை ரோட்டில் உரப் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல முறையில் செயல்பட்டது. இங்கு சேகரமாகும் குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பையாகப் பிரித்து, மட்கும் குப்பையை மண்புழு உரமாக்கி விற்றனர். மட்காத குப்பையை அரைத்து விற்றனர். இந்தச் செயல்பாடுகளுக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த பேரூராட்சியாக டி.கல்லுப்பட்டி தேர்வு செய்யப்பட்டது. அதே பேரூராட்சியில் தற்போது குப்பையை அருகில் உள்ள லட்சுமிபுரம் கிராம பகுதிகளில் கொண்டு சென்று கொட்டுகின்றனர். இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்போர் அவதிப்படுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இப்பகுதியினர் பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் உரப்பூங்காவை செயல்படுத்தி குப்பையை உரப்பூங்காவில் கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.