மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
21-Mar-2025
மதுரை : 'ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், திட்ட அலுவலர் தேவநாதன் ஆகியோருக்கு எதிராக அரசு ஊழியர் சங்கம், வருவாய் அலுவலர்கள் சங்கம் போர்க்கொடி துாக்கியுள்ளன.அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன், பொது செயலாளர் சீனிவாசன் கூறியிருப்பதாவது: பெரம்பலுார் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கோரிக்கை குறித்து சங்க மாநில தலைவர் காந்திமதிநாதன், பொது செயலாளர் பிரபு உட்பட நிர்வாகிகள் கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், திட்ட அலுவலர் தேவநாதனை சந்திக்க சென்றனர். நீண்ட நேரம் காத்திருந்தும் அனுமதி கிடைக்கவில்லை.உள்ளே சென்றவர்களிடம் கோபத்துடன் இருந்த கலெக்டர், நிர்வாகிகள் அளித்த மனுவை கசக்கி வீசி கடுமையாக பேசினார். அவரது உத்தரவின்படி போலீசார் நிர்வாகிகளை கைது செய்தனர். அலைபேசிகளை பறிமுதல் செய்து, பலமணி நேரம் வாகனத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் போலீஸ் அதிகாரிகளிடம், 'இதை அரசு ஊழியர் சங்கம் அனுமதிக்காது. சங்க ரீதியாக இயக்க நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்' என எச்சரிக்கை விடுத்ததும் நிர்வாகிகளை விடுவித்துள்ளனர்.இதற்கு பெரம்பலுார் கலெக்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். வளர்ச்சித்துறை, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். வாகனத்தில் அடைத்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை வேண்டும். இதை வலியுறுத்தி ஏப்., 2 அனைத்து தாலுகாக்களிலும் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளனர். வருவாய்த்துறை கண்டனம்
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன், பொது செயலாளர் சங்கரலிங்கம் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை சந்திக்க மறுத்து, மாநில நிர்வாகிகளை கடுமையாக பேசி, மனுவை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசி கலெக்டர் ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டி புதைத்துள்ளார்.போலீசாரும் விசாரணைமேற்கொள்ளாமல், நிர்வாகிகளை துாக்கிச் சென்று வாகனத்தில் அடைத்து வைத்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்ட பெரம்பலுார் கலெக்டர், போலீசாரை கண்டிக்கிறோம். தமிழக அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
21-Mar-2025