உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை: 'ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டத்தை அரசு உடனே ஏற்படுத்த வேண்டும்' என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மாநில தலைவர் டானியல் ஜெயசிங், பொதுச் செயலாளர் செல்வம் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை செல்வரமணி வெட்டிக் கொலை செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி கைதாகி இருப்பினும், இப்படுகொலை பிற அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மிகப்பெரிய அச்சம், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியிடத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இதேபோல கடந்த வாரம் சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடியில் செவிலியர் பாலியல் தாக்குதலுக்குள்ளானார். இந்நிலை மாற வேண்டுமானால், ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்தோருக்கு நடைமுறையில் உள்ளது போல, பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். அதுபோல ஆசிரியர்களுக்கும் பணிபாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே ஏற்படுத்த வேண்டும்.படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் செல்வரமணியின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்த வேண்டும். கொலையாளிக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ