கலெக்டர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூக பிரதிநிதிகளை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்க தாக்கலான வழக்கில், 'கலெக்டர் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு ஜல்லிக்கட்டு நடத்தும்,' என தமிழக அரசு தரப்பு கூறியதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணையை முடித்து வைத்தது.அவனியாபுரம் கல்யாணசுந்தரம் தாக்கல் செய்த பொதுநல மனு: பாலமேடு, அலங்காநல்லுாரில் கிராம குழுவினரால் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அவனியாபுரத்தில் கிராம குழுவினரின் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு அரசு அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடத்துகின்றனர். இது சட்டவிரோதமானது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூகங்களின் பிரதிநிதிகளை கொண்ட ஒருங்கிணைப்புக்குழுவை அமைக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மேலும் சிலர் மனுக்களை தாக்கல் செய்தனர்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: 2024ல் கலெக்டர் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தியது. அதுபோல் இம்முறையும் நடத்தப்படும். அனைத்து சமூக பிரதிநிதிகள் அடங்கிய 16 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மனுதாரர்களில் கல்யாணசுந்தரம், முனியசாமியும் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதிகள்: இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.