உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்ணங்குடியில் சட்டவிரோத குவாரிக்கு ரூ.ஒரு கோடியே 15 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல்

கண்ணங்குடியில் சட்டவிரோத குவாரிக்கு ரூ.ஒரு கோடியே 15 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல்

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியில் சட்டவிரோத குவாரிக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், 'குத்தகைதாரர்களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 28 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,' என அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.குளத்துார் அருகே கண்ணங்குடி கலிபுல்லா தாக்கல் செய்த மனு: கண்ணங்குடியில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் கனிமம் (கிரானைட்) வெட்டி எடுக்க சிலருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி அதிகளவு எடுக்கப்படுகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது. சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை கோரி தமிழக கனிமவளத்துறை முதன்மைச் செயலர், இயக்குனர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.அரசு வழக்கறிஞர்: குத்தகைதாரர்களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 28 ஆயிரத்து 700 அபராதம் விதித்து இலுப்பூர் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார். இந்நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.குத்தகைதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்: அபராதம் விதித்த உத்தரவை நிறைவேற்றுவதா அல்லது அதற்கு எதிராக சட்டப்படி நிவாரணம் தேடுவதா என்பதை இன்னும் குத்தகைதாரர்கள் முடிவு செய்யவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: சட்டவிரோத குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கை. சம்பந்தப்பட்டோருக்கு எதிராக அரசு தரப்பு நடவடிக்கையை துவக்கி அபராதம் விதித்துள்ளது. அதை பதிவு செய்துகொண்டால் போதுமானது. தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ