ஜல்லிக்கட்டில் இறப்போர் குடும்பத்துக்கு அரசு வேலை: பேரவை வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் : 'ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் முட்டி வீர மரணம் அடைவோரின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் வலியுறுத்தினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் கார்த்திக் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் ஜாபர்அலி, மருது, மணி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வினோத் வரவேற்றார். 25 மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கு மாதந்தோறும் ஒரு காளைக்கு ரூ. 2000 உதவித் தொகை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உரிய நிவாரணம் அளிப்பதுடன், தனியார் மருத்துவமனைகளில் அவருக்கான முழுச்செலவையும் அரசே ஏற்க வேண்டும்.வீர மரணத்தைத் தழுவும் வீரர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்றார் போல் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளை இளைஞர் பேரவை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தமிழக அரசு காப்பீடு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.சென்னையில் நிரந்தர வாடிவாசல் அமைத்து தமிழக அரசே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். மதுரையில் அலங்காநல்லுார், பாலமேடு பகுதிகளில் நடப்பது போல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம கமிட்டியினர் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.